பாடல் 686 - திருவொற்றியூர் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான |
கரியமுகில் போலு மிருளளக பார கயல்பொருத வேலின் ...... விழிமாதர் கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர களபமுலை தோய ...... அணையூடே விரகமது வான மதனகலை யோது வெறியனென நாளு ...... முலகோர்கள் விதரணம தான வகைநகைகள் கூறி விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய் அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர் அவர்கள்புக ழோத ...... புவிமீதே அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ அமரர்குல நேச ...... குமரேசா சிரகரக பாலர் அரிவையொரு பாகர் திகழ்கநக மேனி ...... யுடையாளர் திருவளரு மாதி புரியதனில் மேவு ஜெயமுருக தேவர் ...... பெருமாளே. |
கரு நிறமான மேகத்தைப் போன்று இருண்ட கூந்தல் பாரத்தையும், கயல் மீனுக்கு இணையான வேல் போன்ற கண்களையும் உடைய விலைமாதர்களின் காமப் புணர்ச்சியில் தோய்ந்து, கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள மார்பகங்களில் படிய, படுக்கையில் காம சம்பந்தமான இன்பரச சாஸ்திரங்களைப் படிக்கின்ற வெறி கொண்டவன் இவன் என்று என்னை நாள் தோறும் உலகத்தினர் சுருக்கு என்று தைக்கும்படியாக பரிகாசப் பேச்சுக்ளைப் பேசி இகழ்வதற்கு முன்னர் ஞான கடாட்சத்தைத் தந்து அருள்வாயாக. திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சிவ யோகிகள் ஆகிய இவர்கள் உனது திருப்புகழைப் பரவி ஓத, பூமியில் மேம்பட்டு விளங்கும் நடராஜனாகிய சிவ பெருமான் போற்றும் குரு ராஜ மூர்த்தியே, தேவர் குலத்துக்கு அன்பனே, குமரேசனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியை தனது இடது பக்கத்தில் வைத்திருப்பவரும், விளங்கும் பொன் நிறமான மேனியை உடையவரும் ஆகிய சிவ பெருமான் வீற்றிருக்கும் செல்வம் கொழிக்கும் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில்* விளங்கும் வெற்றி முருகனே, தேவர்கள் பெருமாளே.
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 686 - திருவொற்றியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விளங்கும், தேவர், தனதனன, பெருமான், ஆகிய, நிறமான, பெருமாளே, தேவர்கள்