பாடல் 682 - வடதிருமுல்லைவாயில் - திருப்புகழ்

ராகம் -
மோஹனம் ; தாளம் - அங்கதாளம் - 6 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன ...... தனதான |
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி தனநிவ்வி யேகரை யேறிட அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர அருள்வல்லை யோநெடு நாளின மிருளில்லி லேயிடு மோவுன தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே குணவில்ல தாமக மேரினை யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத குடிலில்ல மேதரு நாளெது மொழிநல்ல யோகவ ரேபணி குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா பணிகொள்ளி மாகண பூதமொ டமர்கள்ளி கானக நாடக பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே படரல்லி மாமலர் பாணம துடைவில்லி மாமத னாரனை பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா மணமொல்லை யாகி நகாகன தனவல்லி மோகன மோடமர் மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா மருமல்லி மாவன நீடிய பொழில் மெல்லி காவன மாடமை வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே. |
அழகு நிறைந்த மாதர் (பெண்), கடல் சூழ்ந்த பூமி (மண்), செல்வம் (பொன்) என்ற மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான அறிவற்றவனாகிய அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய திருவருளை வலிய அருள்வாயோ? அல்லது நீண்ட காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ? உனது திருவருள் என்மீது சிறிதும் இல்லையோ? உன்அடியார் கூட்டத்தை நான் அறியவில்லையே. சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய* அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே, திண்ணிய பெரும் தவநிலையே பெறும்படியான நற்குணத்தோடு கூடிய பிறப்பில் கிடைத்த உடலாகிய வீட்டை எனக்கு நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக. நல்ல யோகிகளே பணிகின்ற நற்குண சீலனே, சிவனே, சிவபிரானுக்கு குரு மூர்த்தியே, பாம்புகளை ஆபரணமாகப் பூண்டவளும், பெரிய கணங்களாகிய பூதங்களோடு அமர்ந்த திருடியும், காட்டில் சிவனுடன் நடனம் ஆடுகின்றவளும், மேலான மென்மையுடையவளுமான பரமேஸ்வரி பார்வதிதேவி பெற்ற தலைவனே, நீரில் படரும் அல்லி, தாமரை, நீலோற்பலம் முதலிய சிறந்த மலர்ப் பாணங்களை உடைய வில்லியாகிய அழகிய மன்மதனின் அன்னையும், பெருமை வாய்ந்த செல்வியுமாகிய லக்ஷ்மிதேவியின் மருமகனே, தெய்வ முருகேசனே, திருமணம் விரைவில் புரிந்தவளும், பெருமை வாய்ந்த மலைக் கொடியும் ஆகிய பார்வதிதேவி வசீகரத்துடன் அமர்ந்து மகிழும் சிதம்பரத்தில் பெரிய நடனம் ஆடிய சிவபிரான் அருளிய பாலனே, வாசனைமிக்க மல்லிகை பெருங்காடாக வளர்ந்துள்ள சோலையும், மென்மையான பூந்தோட்டங்களும், நீர்நிலைகளும் பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள வடமுல்லைவாயிலில்** மேவும் பெருமாளே.
* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.
** வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 682 - வடதிருமுல்லைவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனதய்ய, பார்வதிதேவி, பெருமை, சிவபிரான், நடனம், வாய்ந்த, கூடிய, பெருமாளே, சூழ்ந்த, அழகிய, தகதிமி, பெரிய