பாடல் 671 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா |
பரவி யுனதுபொற் கரமு முகமுமுத் தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப் பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத் தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப் பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே சருவி யினியநட் புறவு சொலிமுதற் பழகு மவரெனப் பதறி யருகினிற் சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார் தமது ம்ருகமதக் களப புளகிதச் சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத் தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக் கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக் கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா கமல அயனுமச் சுதனும் வருணனக் கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க் கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே இரையு முததியிற் கடுவை மிடறமைத் துழுவை யதளுடுத் தரவு பணிதரித் திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத் தவனி தனிலெழிற் கரும முனிவருக் கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே. |
உன்னைப் போற்றி உனது அழகிய கைகளையும், திருமுகத்தையும், முத்து மாலை அணிந்த திருமார்பையும், உடல் ஒளியையும், நறு மணம் வீசும் திருவடிகளையும், உன்னிடம் உள்ள சேவலையும், மயிலையும் இதயத்துள் அன்புடன் அழுந்திப் படிய என் மனத்தில் நிறுத்தி, திடமான சிவ பக்தி மிகப் பெற்று, யாவரும் மகிழ்ச்சி அடையும்படி அற நெறியில் நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒரு பிடி அளவேனும் உணவு இடாமல், கொஞ்சிக் குலாவி, இனிமையான உறவு காட்டும் வார்த்தைகளைச் சொல்லி, முதலிலேயே பழகியவர்கள் போல மாய்மாலம் செய்து, அருகில் இருந்து, காம லீலைகள் புரிந்து, அதற்குத் தக்கதான பொருளை அபகரிக்கும் பொது மகளிருடைய கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை கொண்ட, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி, தன் வசம் இழந்து மனம் உருகி அந்த மோக மயக்கத்துடன் திரிவேனோ? கறுத்த நிறமுள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து அவர்களின் உடல்கள் துண்டுபடவும், (அந்தப் பிணங்களைத் தின்று) கழுகுகள் பசி நீங்கவும், வேகமாக வேலைச் செலுத்திய தீரனே, தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும், அக்கினி தேவனும், யமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடல் எல்லாம் கண் கொண்ட இந்திரனும், மற்ற எல்லா தேவர்களும் தத்தம் பதவிகள் நிலைக்கப் பெற்று விளங்கச் செய்தவனே, ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி வைத்து, புலியின் தோலை உடுத்து, பாம்பாகிய ஆபரணத்தைத் தரித்து, விளக்கம் உற ஊழிக் கூத்து நடனம் செய்யும் சிவ பெருமான் முன்பு ஈன்றருளிய உத்தம வேளே, பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து உரைத்து, இப்பூமியில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த தலமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
* கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 671 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், பெற்று, நிறுத்தி, கொண்ட, அந்த, விரிஞ்சிபுரம், செய்யும், உள்ள, உடல், மகிழ்வுறத், படிய, தமது, தழுவி, திரிவேனோ, பெருமாளே