பாடல் 670 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் -
மனோலயம் ; தாளம் - அங்கதாளம் - 5
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தந்த தானன தனன தந்த தானன தனன தந்த தானன ...... தனதான |
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம் நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம் சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதக ...... ரறியாத தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன சரண புண்ட ¡£கம ...... தருள்வாயே மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு மடிய இந்தி ராதியர் ...... குடியேறச் சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே. |
ஒப்பில்லாத ஐந்து பூதங்களும், நினைக்கும் நெஞ்சும், உயிரும், நெகிழும்படி கூடுகின்ற விரோதமின்மையை ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே, அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும், சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான சமுத்திரம் போல பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம் சமயவாதிகளான பஞ்சமா பாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும், கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ளதுமான திருவடித் தாமரையதனைத் தந்தருள்வாயாக. மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடல் கலக்கமுற்று, சூடாகி, கொந்தளிக்கவும், பெரிய ஆகாய* மார்க்கமாக வந்த சேனைகளும், எதிர்த்துப் போர் செய்த சூரனும் மாண்டு போக, இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற, சிகரங்களை உடைய உயர்ந்த மந்திரஜால கிரெளஞ்சமலை தகர்ந்துபோக வெற்றி வேலினை விடுத்த சிறுவனே, சந்திரனை முடியில் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே, திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த அரசர்களும், நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சைத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* சூரனது சேனைகள் ஆகாயவழியில் வராமல் தடுக்க முருகன் அண்டவாயிலை அடைத்தான்.சூரன் அம்புகள் ஏவி அவ்வழியைத் திறக்க, சேனைகள் ஆகாய மார்க்கமாக போருக்கு வந்தன - கந்த புராணம்.** திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 670 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தானன, சேனைகள், விரிஞ்சிபுரம், மார்க்கமாக, பெருமாளே, பஞ்ச, தகிட, நிறைந்ததும்