பாடல் 669 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதானா |
குலையமயி ரோதி குவியவிழி வீறு குருகினிசை பாடி ...... முகமீதே குறுவியர்வு லாவ அமுதினினி தான குதலையுமொ ராறு ...... படவேதான் பலவிதவி நோத முடனுபய பாத பரிபுரமு மாட ...... அணைமீதே பரிவுதரு மாசை விடமனமொ வாத பதகனையு மாள ...... நினைவாயே சிலைமலைய தான பரமர்தரு பால சிகிபரிய தான ...... குமரேசா திருமதுரை மேவு மமணர்குல மான திருடர்கழு வேற ...... வருவோனே கலின்வடிவ மான அகலிகைபெ ணான கமலபத மாயன் ...... மருகோனே கழனிநெடு வாளை கமுகொடிய மோது கரபுரியில் வீறு ...... பெருமாளே. |
கூந்தலின் மயிர் குலைந்து போக, கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின் புட்குரல் இசை பாடி, முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப் பாதகனையும் ஆண்டருள நினைந்து அருளுவாயாக. வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான் ஈன்ற புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே, அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே, கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் மருகனே, கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் கமுக மரம் ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 669 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, கொண்ட, உள்ள, விரிஞ்சிபுரம், மேல், பெருமாளே, வீறு, பாடி, வாளை