பாடல் 664 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் -
பிருந்தாவன ஸாரங்கா ; தாளம் - அங்கதாளம் - 23 1/2
தகதிமிதகதிமி-4, தகதிமி தகதிமி-4
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதகதிமிதகதிமிதக-7, தகிடதகதிமி-3 1/2
தகதிமிதகதிமி-4, தகதிமி தகதிமி-4
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதகதிமிதகதிமிதக-7, தகிடதகதிமி-3 1/2
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த தானாதன தானந் தானன ...... தந்ததான |
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும் வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும் இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான் கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக் கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே. |
தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளியின் தினைப்புனத்தில் போய் நின்று கொண்டு, நீ என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்), என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது, என்று கூறி, ஒரு சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து, வள்ளி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே, இதோ இவ்வுணவு இனிப்புடன் கலந்து இருப்பதைப் பார் என்று கூறிய வேடுவன் கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று (கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே, எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும், பழைய நூல் திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால், ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி நூறாயிர பேதமாக** வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான். (கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கும், நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும், நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ உரலோடு கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும், மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக வளர்ந்து கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி மகா விரதசீல வாமனனாய் பகிரங்கமாக எதிரில் நின்றவனும் ஆகிய நாராயண மூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே, விளைச்சல் உள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும் வெள்ளிநகர்*** என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே, உன்னைத் துதிக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே.
* மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** சம்பந்தர் தேவாரத்தின்படி சாதம் (பிறப்பு) 84 நூறாயிரம் வகையாகும். ஊர்வன - 11, மானிடம் - 9, நீர்வாழ்வன - 10, பறவைகள் - 10, மிருகங்கள் - 10, தேவர்கள் - 14, தாவரங்கள் - 20, ஆக 84 நூறாயிரம் (8,400,000).
*** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 664 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தகதிமி, ஆகிய, தலைவனே, பெரிய, உள்ள, மடல், நூறாயிரம், மைலில், மணம், எழுதி, தலைவியின், என்றும், இடையில், நின்று, தின்று, வள்ளி, தனாதன, தகிட, வெள்ள, கலந்து, கொண்டு, தேவர்கள், நாராயண, நூறாயிர, உள்ளது