பாடல் 657 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் -
மாயாமாளவகெளளை ; தாளம் - அங்கதாளம் - 15
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த ...... தனதான |
சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல் திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல் அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன் றகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ நிகரிட அரிய சிவசுத பரம நிர்வச னப்ர சங்க ...... குருநாதா நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம வெகுமுக ககன நதிமதி யிதழி வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே. |
அஷ்ட கிரிகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில், அன்றலர்ந்த புதிய கடப்பமலர், சிறிய வாள், வேல், ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம் நூறு இதழ்கள் உள்ள தாமரைகள், திவ்யமான கரத்திலே பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க) அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள, நெல் விளையும் வள்ளிமலையின் வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா, என்று உலகெலாம் உணரக் கூறும் சொற்களால் அல்லது உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ? ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதனே, பசுக்கூட்டங்களைக் கொண்ட இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின்* கீழே வீற்றிருந்த அழகனே, ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறையையும், கொன்றையையும், வில்வத்தையும் சடையில் முடித்த நம் சிவபெருமானின் பெருஞ் செல்வமே, மலர்ந்த தாமரைகளும், நறுமணம் மிகுந்த தாமரைகளும் நிறைந்த வெள்ளிகரத்தில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம் இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள் - சுவாமிமலை மகாத்மியம்.
** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 657 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, தகிட, தகதிமி, மைலில், பெருமாளே, தாமரைகளும், மர்ந்த, தனதன, பழைய, நெல்லி, முடித்த