பாடல் 653 - காசி - திருப்புகழ்

ராகம் - சாரங்கா; தாளம்
- அங்கதாளம் - 8 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தான தந்தன தானன ...... தனதான தான தந்தன தானன ...... தனதான |
வேழ முண்ட விளாகனி ...... யதுபோல மேனி கொண்டு வியாபக ...... மயலூறி நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா காள கண்ட னுமாபதி ...... தருபாலா காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே. |
வேழம்* என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல உள்ளிருக்கும் சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி, தினமும் அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து, நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக. முன்பு சமணக் குருக்கள் கழுவில் ஏறி இறக்கும்படியாக வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே, விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே, கங்கைநதிக் கரையிலுள்ள காசிநகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* வேழம் என்ற தேரை விளாம்பழத்துக்குள் பாய்ந்தால், பழம் உள்ளீடு இல்லாமல் வெறும் ஓடாகப் போய்விடும்.
** காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 653 - காசி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகதிமி, பெருமாளே, மிகுந்த, காசி, தனதான, தந்தன, தானன, வென்ற