பாடல் 652 - காசி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தந்தத் தனதன தானன தானன தந்தத் தனதன தானன தானன தந்தத் தனதன தானன தானன ...... தனதான |
மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல் பங்கப் படமிசை யேபனி போல்மதம் வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல பந்துப் பனைபழ மோடிள நீர்குட மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே திங்கட் பதுசெல வேதலை கீழுற வந்துப் புவிதனி லேமத லாயென சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச் செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ அங்கைத் தரியென வேயொரு பாலக னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி சங்குத் திகிரிக ரோனரி நாரவ ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே கங்கைச் சடைமுடி யோனிட மேவிய தங்கப் பவளொளி பால்மதி போல்முக கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா கந்துப் பரிமயில் வாகன மீதிரு கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ் கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே. |
ஒரு பெண்ணும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்தி, காம இச்சை என்னும் ஒரு உந்துதல் தம் மீது அடைய, (அதன் விளைவாக) பனி போல சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, பிரமனது அருள் கூடி (கருவானது) வண்டு தடித்து வளருவது போல் தடித்து, நாள் பல செல்ல, பந்தின் அளவாகி, பனம் பழத்தின் அளவாகி, இள நீர் போலவும், குடம் போலவும் நெருங்கி வளர்ந்து, பின்னும் பல பல வளர்ச்சியுடன், புணர்தல் செய்த அந்த இடத்தின் வழியாக, மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து பூமியில் பிறந்து, மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி, தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரிக்க, செவ்விய பொலிவுள்ள பருத்த முலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் பல செல்ல, பின்பு அழகிய தவழ் நடை நாட்களும் செல்ல, பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அழிந்து போவேனோ? உள்ளங்கை நெல்லிக் கனி போல எளிதில் புலப்படுவான் (இறைவன்) என்று ஒரு பிள்ளையாகிய பிரகலாதன் கூற, இன்ப அன்புடனே ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்டு நரசிங்கமாய்த் தோன்றி, இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து, தேவர்களுக்கு உதவி செய்த பெருமான், தம்மை விட்டு நீங்காத ஆபரணங்களான பஞ்ச ஜன்யம் என்னும் சங்கும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக் கரத்தில் கொண்டவன், (காவிரி, கொள்ளிடம் என்னும்) நதியின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேஷன் என்னும்) பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே, கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் இவைகளின் ஒளியைக் கொண்டவளும், பால் நிறத்து வெண் மதியைப் போல் திரு முகம் கொண்டவளும், இருள் கொண்ட கூந்தலை உடையவளுமாகிய பரமேஸ்வரி அருளிய குழந்தையே, பாய வல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல், இரண்டு மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆசையோடு மகிழ்கின்றவனே, கங்கை நதிக் கரையில் உள்ள தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 652 - காசி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தானன, தந்தத், செல்ல, தனதன, பெரிய, செய்த, அழகிய, கரையில், கொண்டவளும், மேல், உள்ள, போலவும், உடைய, போல், மேவிய, நாள்பல, கணவனும், காசியில், பெருமாளே, தடித்து, தோன்றி, அளவாகி