பாடல் 645 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான |
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை வலிசெயா நிற்கு ...... மதனாலும் மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட மதிசுடா நிற்கு ...... மதனாலும் இருகணால் முத்த முதிரயா மத்தி னிரவினால் நித்த ...... மெலியாதே இடருறா மெத்த மயல்கொளா நிற்கு மிவளைவாழ் விக்க ...... வரவேணும் கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி கலவிகூர் சித்ர ...... மணிமார்பா கனகமா ணிக்க வடிவனே மிக்க கதிரகா மத்தி ...... லுறைவோனே முருகனே பத்த ரருகனே முத்தி முதல்வனே பச்சை ...... மயில்வீரா முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு முறியவேல் தொட்ட ...... பெருமாளே. |
வாசனை நீங்காததும், வெற்றியே பெறுவதுமான மலர்ப் பாணங்களை தொடுத்து, (கரும்பு) வில்லைக் கையில் வைத்து வலிமையுடன் நிற்கும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டி வரும் கிரணங்களைக் கொண்ட வட்ட வடிவமான சந்திரன் கதிர்களால் (இவளைச்) சுட்டுக்கொண்டு நிற்பதனாலும், இரண்டு கண்களிலிருந்தும் முத்துப் போன்ற கண்ணீர் சிந்தி, யாமங்கள்* தோறும் இரவில் தினமும் மெலியாதபடி, துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம் கொண்டு நிற்கும் இந்தப் பெண்ணை வாழ்விக்க நீ வந்து அருள வேண்டும். யானைகள் கூடியுள்ள (வள்ளி) மலையில் அருமையான வேடப் பெண் வள்ளியுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும் அழகிய மணி மார்பனே, பொன், மாணிக்கம் போன்ற உருவத்தனே, சிறந்த கதிர்காமம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, முருகனே, பக்தர்களுக்கு அருகில் இருப்பவனே, முக்தி தரும் முதன்மையானவனே, பச்சை மயில் வீரனே, விரைந்து வந்து மேல் எதிர்த்த பொல்லாத சூரன் கேடு உற்று அழிபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
* யாமம் = மூன்று மணி நேரம். மாலையும் இரவும் சேர்ந்து மொத்தம் நான்கு யாமங்கள்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 645 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, நிற்கு, தத்த, நிற்கும், சந்திரன், சேர்ந்து, பெருமாளே, வந்து, முருகனே, மதனாலும், வட்ட, மத்தி, பச்சை