பாடல் 643 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனா தத்தனத் தனதனா தத்தனத் தனதனா தத்தனத் ...... தனதான |
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட் டருபரா சத்தியிற் ...... பரமான துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச் சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற் சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற் புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன் புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப் புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக் கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக் கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற் கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே. |
சரியை மார்க்கத்தில்* இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும், நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு முடியாததும், வேறுபட்ட சமயங்களினால் நெருங்க முடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும் மேலானதானதும், யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய், சிறந்த இடமாய், குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை, முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான் பொருந்தி அடைவேனோ? மதில் சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே, வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய குமரனே, மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே, கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின் மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு, வாழை மரங்களிலும், மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 643 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, மார்க்கம், தத்தனத், இருப்பவர்களுக்கும், ஞானம், தொழில், இடுதல், கிரியை, பெருமாளே, சரியை, நிலையை