பாடல் 627 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் ...... தனதான |
பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப் பருவம தன்கைச் ...... சிலையாலே பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப் பெருவழி சென்றக் ...... குணமேவிச் சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச் செயலும ழிந்தற் ...... பமதான தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச் சிலசில பங்கப் ...... படலாமோ கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக் கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன் கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக் கிழிபட துன்றிப் ...... பொருதோனே குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற் பனமநு வுஞ்சொற் ...... குருநாதா குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக் குடிவளர் கந்தப் ...... பெருமாளே. |
ஞானிகள் அல்லாத பிறர் புகழும், இனிய சொல்லைப் பேசும் வாலிபப் பருவமுள்ள மன்மதனுடைய கையில் உள்ள வில்லால், பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள் பெருகும் பொய்யான பெரிய (காம) வழியில் போய் அந்தப் பொய்க் குணத்திலே பொருந்தி, அதனால் சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து, அற்ப குணமுள்ள மாதர்களின் கயல் மீன் போன்ற கண்ணை விரும்பி, (அதனால்) சில சில அவமானங்களை அடையலாமோ? கர்வமும், வஞ்சக எண்ணமும், சூதும் கொண்டு, எட்டுத் திசைகளிலும் எதிர்த்து போருக்கு எழுந்த சூரன் அவனுடைய சுற்றத்தாருடன் மங்கி அழிய, அவர்கள் தலை முடிகள் சிதைந்து கிழிபட, நெருங்கிச் சண்டை செய்தவனே, குட்டை வடிவு உள்ள (அகத்திய) முனிவர் உண்மைப் பொருளை அறியும்படி அன்று மனத்தில் தோன்றிய மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, விளங்கும் மலையாக, பரிசுத்தமான மலையாக மேம்பட்டு விளங்கும் குன்றக் குடியில்* வீற்றிருந்து அருளும் கந்தப் பெருமாளே.
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 627 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தத், அதனால், மலையாக, உள்ள, விளங்கும், கந்தப், கிழிபட, குன்றக், பெருமாளே