பாடல் 620 - பூம்பறை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தாந்ததன தான தாந்ததன தான தாந்ததன தான ...... தனதான |
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர் வாந்தவிய மாக ...... முறைபேசி வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி ஏந்துமுலை மீது சாந்துபல பூசி ஏங்குமிடை வாட ...... விளையாடி ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல் ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ ...... எனவோசை பாங்குபெறு தாள மேங்கநட மாடு பாண்டவர்ச காயன் ...... மருகோனே பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு பூங்கதலி கோடி ...... திகழ்சோலை பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு பூம்பறையின் மேவு ...... பெருமாளே. |
மாந்தளிர் போல் நிறமுள்ள தோலால் மூடப்பட்ட உடலை உடைய விலைமாதர்கள் (காமுகரிடம்) உறவு முறைகள் பலவற்றை உரிமையுடன் பேசிக் காட்ட வல்லவர். அவர்கள் மீது விருப்பமும், பெருத்த மோகமும் ஏற்பட்டு, அதற்கு அமைதியைத் தர வேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த வீடுகளைத் தேடி, அவர்களோடு உறவாடி, உயர்ந்து நிற்கும் மார்பில் சந்தனம் முதலிய பல நறு மணங்களைப் பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க சரசமாக விளையாடிப் (பின்னர்), உபத்திரவங்கள் (ஹிம்சைகள்) உண்டாக, வெட்கம் இன்றிக் கூடிய வேசையர்களின் உறவு நன்றோ? (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம் ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய மருகனே, பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும், பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன், அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும் இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* கோம்பை - செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.
** பூம்பறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 620 - பூம்பறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, மரங்களும், தாந்ததன, உறவு, நிற்கும், அழகிய, பெருமாளே, சேசெ, தேடி, உறவாடி, பூசி, தாளம், லாவு