பாடல் 615 - தென்சேரிகிரி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தானத் தந்த தனதன தந்தானத் தந்த தனதன தந்தானத் தந்த தனதன ...... தனதான |
கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு கண்டாரைச் சிந்து விழிகொடு கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக் குன்றோடொப் பென்ற முலைகொடு நின்றோலக் கஞ்செய் நிலைகொடு கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும் பண்டாடச் சிங்கி யிடுமவர் விண்டாலிக் கின்ற மயிலன பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு பண்டேசொற் றந்த பழமறை கொண்டேதர்க் கங்க ளறவுமை பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே வண்டாடத் தென்றல் தடமிசை தண்டாதப் புண்ட ரிகமலர் மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா வன்காளக் கொண்டல் வடிவொரு சங்க்ராமக் கஞ்சன் விழவுதை மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே திண்டாடச் சிந்து நிசிசரர் தொண்டாடக் கண்ட வமர்பொரு செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே சிங்காரச் செம்பொன் மதிளத லங்காரச் சந்த்ர கலைதவழ் தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே. |
புகழ்ந்து பேசி, கொஞ்சிப் பயிலும் மொழிகளைக் கொண்டும், தாம் சந்தித்துப் பார்த்தவர்களை (மனதை) வெட்டி அழிப்பது போன்ற கண் கொண்டும், பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலைக் கொண்டும், வடக்கில் உள்ள மேரு மலைக்கு நிகரான மார்பினைக் கொண்டும், சபாமண்டபத்தில் நிலைத்து கொலு வீற்றிருப்பது போன்ற தோரணையைக் கொண்டும், கொடி போல இளைத்துப் போன மெல்லிய இடுப்பைக் கொண்டும், எல்லாரிடத்தும் பழகும் சரசம் விளங்க வசப்படுத்தும் பொது மகளிரின் வாய் விட்டுக் கூவுகின்ற மயில் போன்ற நடிப்பால், எனது விருப்பம் அவர்களிடம் செல்லுகின்ற மயக்கம் நீங்கும்படி, தொன்மை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேதமொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, உமையை இடப் பாகத்தில் கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்தப் பிரணவப் பொருளை (எனக்கும்) அருள்வாயாக. வண்டுகள் களித்து விளையாட, தென்றல் காற்று வீசும் குளத்தை விட்டு நீங்காது, தாமரை மலர்கள் வாடிப் போகாமல் அவைகளிடம் போய் தேனைப் பருகும் வயலூரில் உறைபவனே, வலிய கரிய மேகத்தின் வடிவு உடையவனாய், போர் செய்யும் எண்ணமுடைய கம்சன் இறந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய கண்ணபிரானிடம் அன்பு காட்டும் லக்ஷ்மியின் மருகனே, சிதறுண்ட அசுரர்கள் திண்டாடும் படியாகவும், அடிமை பூணும்படியாகவும் செய்து, அவர்களுடன் சண்டை செய்த செந்நிறமான வேலைச் செங்கையில் உடைய சண்முகத் தேவனே, அழகிய செம்பொன் மதிலின் அலங்காரம் கொண்டதாய், அதனைச் சந்திரனுடைய கதிர்கள் தழுவுவதான தென்சேரிகிரி* மலையில் இன்பத்துடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 615 - தென்சேரிகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டும், தந்தானத், தனதன, தந்த, பெருமாளே, செம்பொன், புண்ட, சிந்து, தென்றல்