பாடல் 616 - கொங்கணகிரி - திருப்புகழ்

ராகம் - மனோலயம்;
தாளம் - ஆதி - கண்டநடை - 2
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன ...... தனதான |
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. |
ஐந்து கரங்களை உடைய விநாயகரைப் போன்ற மனமும் (மனோவேகத்துக்கு விநாயகர் அகிலத்தையும் எளிதாக வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிட முடியும்) ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை அருள் புரிவாயாக. இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மன நிலையை அருள் புரிவாயாக. நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக் கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக நாட்டுக் காவலர்கள் இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*) (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக. யானைமுகப் பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற கொங்கணகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது.திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று அருணகிரியார் வேண்டுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 616 - கொங்கணகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அருள், புரிவாயாக, முதலை, தந்ததன, அருள்வாயாக, தத்ததன, யருள்வாயே, பொருளை, ரகசியப், கொங்கணகிரி, சென்ற, கரையில், ஓராண்டு, பாலகனை, எனக்கு, பெருமாளே, புத்தியினை, ஐந்து, வளரும், உயிர், நாட்டில், என்னும்