பாடல் 589 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் ...... தனதான |
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற் றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க் கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின் உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத் துளங்காத் திடப்புன் ...... கவிபாடி ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத் துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட் கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய் கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத் துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே. |
எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம் பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல் தொழிலை மேற்கொண்டு, அத்தொழிலில் இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில் மூழ்கி, அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி, அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி, பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும் இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ? மத யானை காட்டில் எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான திருப்புயங்களைத் தந்தவனே, கரும்பு வில்லை உடைய மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில்* விளங்கி நிற்கும் ஒளி வீசும் வேலனே, உன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும், உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம் உற்றவர்களுக்கும், ஞானிகளுக்கும் திருவருள் பாலிக்கும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 589 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தாத், உள்ளம், மனம், திருச்செங்கோடு, இருப்பதால், என்றும், கொண்டவர்களுக்கும், நிலை, பார்த்து, பெருமாளே, கடந்தோற், இடம்