பாடல் 588 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தனதன தனதன தனதன தந்தான தந்த ...... தனதான |
கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் ...... மடமாதர் கலவியில் முழுகிய நெறியினி லறிவுக லங்காம யங்கும் ...... வினையேனும் உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும் உன்பாத கஞ்ச ...... மலர்மீதே உரவொடு புனைதர நினைதரு மடியரொ டொன்றாக என்று ...... பெறுவேனோ வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி வந்தேற இந்த்ர ...... புரிவாழ மதவித கஜரத துரகத பததியின் வன்சேனை மங்க ...... முதுமீன திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் திண்டாட வென்ற ...... கதிர்வேலா ஜெகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோட மர்ந்த ...... பெருமாளே. |
எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும், கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும், என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல் உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ? கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும், மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும், முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே, பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 588 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, இருப்பதால், என்றும், திருச்செங்கோடு, உடையவரும், பெறுவேனோ, பெருமாளே