பாடல் 583 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தந்ததான |
மோதி யிறுகிவட மேரு வெனவளரு மோக முலையசைய ...... வந்துகாயம் மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி மூட மெனஅறிவு ...... கொண்டதாலே காதி வருமியம தூதர் கயிறுகொடு காலி லிறுகஎனை ...... வந்திழாதே காவ லெனவிரைய வோடி யுனதடிமை காண வருவதினி ...... யெந்தநாளோ ஆதி மறையவனு மாலு முயர்சுடலை யாடு மரனுமிவ ...... ரொன்றதான ஆயி யமலைதிரி சூலி குமரிமக மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை தோய வளர்கிரியி ...... னுந்திநீடு சோலை செறிவுளவி ராலி நகரில்வளர் தோகை மயிலுலவு ...... தம்பிரானே. |
மேல் எழுந்து, திண்ணிதாய், வடக்கில் உள்ள மேரு மலை போல் வளருவதாய், காமத்தை ஊட்டும் மார்பகங்கள் அசையும்படி அருகே வந்து, உடலைக் கொண்டு மோசம் செய்கின்ற விலைமகளிரின் மாயையில் முழுகி, மூடத்தன்மை என்னும்படி அறிவைக் கொண்ட காரணத்தால், உயிரைப் பிரிக்க வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல், எனக்குக் காவலாக இருந்து வேகமாக ஓடிவந்து, உன் அடிமையாகிய நான் காணும்படி நீ வருவது இனி எந்த நாள் ஆகுமோ? ஆதி மறையவன் ஆகிய பிரமனும், திருமாலும், பெரிய சுடுகாட்டில் ஆடும் சிவனும் (ஆகிய இம் மூன்று பேரும்) ஒன்றதான தாய், குற்றம் அற்றவள், திரி சூலம் ஏந்தியவள், குமரி, மகமாயி, கெளரி, உமா தேவி ஈன்ற செல்வமே. சோதியான ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள மலையின் இடையே பாயும் ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள விராலி நகரில்* பொலிந்து விளங்கும் தோகை மயிலின் மேல் உலவும் தம்பிரானே.
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 583 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, வந்து, இருந்து, ஆகிய, அருகே, மேல், மேரு, தோகை, தம்பிரானே