பாடல் 582 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான |
மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல் வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக் கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில் கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில் மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல் ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர் ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே. |
மேகத்தைப் போல் கருமையான கூந்தலைப் பறக்கவிட்டு, இரண்டு தாமரை போன்ற கண்களால் கவ்வி இழுத்து, படுக்கையின் மேல் (காமுகரை) வீழ்த்துகின்ற விளையாட்டில் ஆடை நெகிழ, மேகலை என்னும் இடை அணியும் தனியாகக் கழல, ஒன்றுபட்டு இந்திரியங்களும் இயங்க, கயல் மீன், வேல் போன்ற கண்களும் குவிந்து மூட, குரலானது மயில், காடை, குயில் என்ற பறவைகளின் குரலில் ஒலிக்க, சென்று கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, உருகி, மகிழ்ச்சி மிக கூடவே இருந்து, நீங்குதல் இல்லாத இணைப்பில் முழுகி, கூடித் தழுவி, களைத்துப் போய் பாரமான மார்பகங்களின் மீது துயிலுதல் மிகக் கொண்டாலும், என் உறுதுணையாகிய உனது தாமரைத் திருவடிகள் இரண்டையும் மறக்க மாட்டேன். மிக்க ஆரவாரத்துடன் பேரிகைகள் பேரொலி செய்ய விராலி மலையின்* கோயிலில் மூன்று உலகங்களும் தொழுது போற்ற உறைபவனே, வட திசையில் முன்பு ஒரு முறை மலையாகிய மேருவை (செண்டு என்ற) அம்பால் வீழ்த்திய** வசீகரனே, சங்கை ஏந்திய திருமால் உனது வலிமையை வாழ்த்திட, (சூரனைப்) பொருட்படுத்தாமல் அவனது உடல் அழியும்படி வேலாயுதத்தால் சூரனை வென்று, (திக்கு விஜயத்தில்) போருக்குச் சென்று, குறைவு இல்லாதபடி (பல அசுரரையும்) வென்று, அந்தச் சூரனால் பயந்து ஓடிய தேவர்களின் தலைவனான இந்திரனுடைய மகனாகிய ஜயந்தனைக் காத்து, அரசாட்சி புரியும்படி அவனைச் சிறையினின்றும் விடுவித்து, அவன் ஆளும் விண்ணுலகில் மீண்டும் குடியேற்றி வைத்த பெருமாளே.
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
** முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடமிருந்து பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். அச்செயல் இங்கு குறிப்பிடப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 582 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, தந்தன, தானன, இருந்து, வென்று, சென்று, உனது, வாழ்த்திட, மேகலை, மேருவை, சூரனை, பெருமாளே