பாடல் 581 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - மாண்ட்;
தாளம் - ஆதி
தானான தான தானான தான தானான தான ...... தனதான |
மாலாசை கோப மோயாதெ நாளு மாயா விகார ...... வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு ...... மினிநீயே நாலான வேத நூலாக மாதி நானோதி னேனு ...... மிலைவீணே நாள்போய் விடாம லாறாறு மீதில் ஞானோப தேச ...... மருள்வாயே பாலா கலார ஆமோத லேப பாடீர வாக ...... அணிமீதே பாதாள பூமி யாதார மீன பானீய மேலை ...... வயலூரா வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத ...... பதிசேயே வீரா கடோர சூராரி யேசெ வேளே சுரேசர் ...... பெருமாளே. |
மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம் ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும் பிரபஞ்ச மாயாவிகார வழியிலே போகின்ற மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான் நானெனிலும், நாதனே, தாயும், தந்தையும் இனி நீதான் எனக்கு நான்கு வேத நூல்களையும், ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும், நான் படித்ததும் இல்லை. வீணாக வாழ்நாள் போய் விடாமல் முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட நிலைத்த ஞானோபதேசத்தை அருள்வாயே, பாலனே, செங்குவளை மலர்ப் பிரியனே, ஆபரணங்களின் மேல் சந்தனம் பூசிய அழகனே, பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே, மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த மேற்கு வயலூரில் குடிகொண்டவனே, வேலனே, விராலிமலைச்** செல்வனே, திரளான பேய்கள், பூதகணங்கள் வணங்கும் தலைவன் (சிவன்) குமாரனே, வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே, செவ்வேளே, தேவர்களுக்கு ஈசனே, பெருமாளே.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 581 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, தத்துவம், புறநிலை, தத்துவங்கள், மேற்கு, பெருமாளே, நூல்களையும்