பாடல் 580 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன ...... தனதான |
மாயா சொரூப முழுச்ச மத்திகள் ஓயா வுபாய மனப்ப சப்பிகள் வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும் மாலா கிவாட நகைத்து ருக்கிகள் ஏகா சமீது தனத்தி றப்பிகள் வா¡£ ரி¡£ரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம் ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள் ஈயா தபோதி லறப்பி ணக்கிகள் ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம் ஆமா றெணாத திருட்டு மட்டைகள் கோமா ளமான குறிக்க ழுத்திகள் ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள் காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு போர்போ லசோதை பிடித்த டித்திட காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும் வேயா லநேக விதப்ப சுத்திரள் சாயா மல்மீள அழைக்கு மச்சுதன் வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா வீணாள் கொடாத படைச்செ ருக்கினில் சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே. |
மாயையே உரு எடுத்தாற் போன்ற முழுமையான சாமர்த்தியம் உள்ளவர்கள். முடிவில்லாத தந்திரம் நிறைந்த மனத்தோடு பசப்புபவர்கள். வாழ் நாட்களை அறுத்து வீணாக்கும் கடைக் கண்ணை உடையவர்கள். முனிவர்களும் காம மயக்கத்தால் வாடும்படி சிரித்து, அவர்களை உருக்க வல்லவர்கள். மேலே இட்ட ஆடையின் மீது மார்பகத்தைத் திறந்து காட்டுபவர்கள். வாருங்கள், இருங்கள் என்றெல்லாம் கூறும் முழு மோசக்காரிகள். மிக்க மோகத்தையும் ஆய்வதற்கு இடமில்லாத வகையில் காம ஆசையை எழுப்புகின்ற வஞ்சனை வாய்ந்தவர்கள். காசு கொடுக்காத போது மிகவும் மாறுபட்டு நிற்பவர்கள். கள் உண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனத்தினர்கள். பழி பாவம் ஆகுமோ என்று நினைக்காத திருட்டு வீணிகள். வேடிக்கையான நகக் குறிகள் உள்ள கழுத்தை உடையவர்கள். ஆசாரம் குறைவாக உள்ள மார்பகங்களை விலைக்கு அளிப்பவர்கள். இத்தகையோரின் உறவு நல்லதோ? காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களை பொருந்திய மனத்துடன் சற்றும் யோசிக்காமல் எடுத்து இடைச்சியர்கள் பார்க்காத வண்ணம் (கண்ணன்) குடித்துக் கொண்டிருக்கும் போது, உரலுடன் அவனுடைய மேகம் போன்ற திருமேனியைக் கட்டி ஒரு போரிடுவது போல் (தாயாகிய) யசோதை பிடித்து அடிக்க, அப்போது இரண்டு காதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டு அழுது, இனிமையாக ஊதும் புல்லாங்குழலால் பல விதமான பசுக் கூட்டங்களை தளராத வண்ணம் அழைத்து வரும் (கண்ணனாம்) திருமாலை சிறப்பு வாய்ந்த மாமனாகக் கொண்டருளும் வயலூரானே, ஒரு நாளும் வீணாகாதபடி என்றும் போர் இருந்த படை நம்மிடம் உண்டு என்னும் அகந்தை கொண்டிருந்த சூரன் இறந்து பட (அவன் மாமரமாய் நின்ற) கடலில் ஏவிய அற்புத வேலாயுதத்தை ஏந்தியவனே, விராலி மலை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 580 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தத்தன, தனத்த, தனான, உண்டு, உள்ள, என்னும், போது, வண்ணம், விராலி, டைச்சிகள், திருட்டு, அற்புத, பெருமாளே, உடையவர்கள்