பாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தந்ததன தானதன தத்தான தந்ததன தானதன தத்தான தந்ததன தானதன தத்தான ...... தனதான |
சந்தனச வாதுநிறை கற்பூர குங்குமப டீரவிரை கத்தூரி தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாம வம்புதுகி லாரவயி ரக்கோவை தங்கியக டோரதர வித்தார ...... பரிதான மந்தரம தானதன மிக்காசை கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வை அம்பிலுளம் வாடுமறி வற்றேனை வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார சம்ப்ரமம யூரதுர கக்கார என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின் இன்பஅநு போகசர சக்கார வந்தஅசு ரேசர்கல கக்கார எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின் செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார குன்றெறியும் வேலின்வலி மைக்கார செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும் திங்கள்முடி நாதர்சம யக்கார மந்த்ரவுப தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே. |
சந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள கஸ்தூரி, குளிர்ந்த புனுகுச் சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை பூசப்பட்டதாய், தண்ணிய மிக்க மணமுள்ள சண்பகப்பூ, செங்கழுநீர்ப்பூ, மகிழம்பூ இவற்றின் மாலைகள் பூண்டதாய், கச்சு, ஆடை (இவைகளின் மேற்கொண்ட) முத்து மாலை வைர மாலையை உடையதாய், கடினமும், விரிவும், பருமையும் உடையதாய், மந்தர மலை போன்றதாய் உள்ள மார்பகங்களை உடையவர்களாய், பேராசை கொண்டு பொருளைத் தேடும் மிகக் கொடியவர்களாய், வஞ்சக எண்ணம் கொண்ட மனம் உள்ளவர்களாய், அழகிய நாகணவாய்ப் புள்ளைப் போன்றவர்களாயுள்ள விலைமாதருடைய வருத்தத்தை உண்டு பண்ணும் மாயக் காமப் பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவிலியாகிய என்னிடம் வந்து என்னை அடிமை கொண்டு ஆள்வதற்கு இனி எப்போது நினைப்பாய்? இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையாளனே, மிகச் சிறந்த மயிலாகிய குதிரையை வாகனமாகக் கொண்டவனே, என்றும் நீங்காத இளமையாக இருப்பவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் இன்ப அனுபோக காம லீலைகளை உடையவனே, வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே, எங்களுடைய உமா தேவியின் குழந்தை என்ற அருமை வாய்ந்தவனே, மிகுந்த பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து தேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே, கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல் வலிமை கொண்டவனே, சத்தியச் சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே, அழகு வாய்ந்த சந்திரனைத் தரித்த நாதருடைய சைவ சமயத்தனே, (அந்தச் சிவபெருமானுக்கு) மந்திர உபதேசம் செய்த பெருமை வாய்ந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும், அருமைத் தேவர்களின் பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மைக்கார, தானதன, கொண்டு, தத்தான, தந்ததன, கொண்டவனே, மிக்கது, வந்து, வாய்ந்தவனே, இருப்பவனே, உடையதாய், கக்கார, பெருமாளே, மணமுள்ள, கொண்ட, மனம்