பாடல் 578 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன ...... தனதான |
காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக் கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர் ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக் கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே. |
(முதல் ஒன்பது வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மன்மதனுடைய பாணமாக இருந்து, இளைஞர்களின் உயிரைக் கவர்ந்து சென்று, அழகு வாய்ந்த காதில் ஆடுகின்ற கனத்த இரண்டு குண்டலங்கள் வரையிலும் ஓடிச் சென்று, கருமேகம் போல் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள் முனை போன்று வலிமையும் பெருமையும் கொண்டதாய், கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்ற இக்கண்களின் கொடுமை முன் (நாம் எம்மட்டு எனும்படி) யம தூதுவர்கள் இறுமாப்பை இழக்க, மோகத் தன்மையை ஊட்டி, நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருக்கு ஒப்பான ஆட்டத்தையும் ஆச்சரியத்தையும் காட்டும் கண்களை உடைய வேசியர் மீது நீங்காத நிந்தையான பழிச் சொல்லைக் கொண்டிருந்த மயக்கம் (என்னை) விட்டு நீங்க, நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன். பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி, நல்லொழுக்கம் உள்ள உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும், ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன் உன்னைப் போற்ற, வட திசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து, அறியாமை என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க வாய்ந்த இளையவனே, நெறி தவறாத முறையில் சிவ பூஜையும், ஆண்மையும், இல்லை என்னாத கொடையும் தினந்தோறும் பொருந்தியுள்ள கோனாட்டைச்* சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 578 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானாத்தன, தனதன, முனை, வாய்ந்த, வீற்றிருக்கும், என்னும், சென்று, உள்ள, கண்களை, வேலின், திரிபுரை, அறுவகை, பெருமாளே, இருந்து