பாடல் 577 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - தோடி;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
- எடுப்பு - 1/2 தள்ளி
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
- எடுப்பு - 1/2 தள்ளி
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயிலை யாளி காபாலி ...... கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி ...... சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத ...... அருளாயோ சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி துரக கோப மீதோடி ...... வடமேரு சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும் திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள திரளி னோடு பாறோடு ...... கழுகாடச் செருவி னாடு வானீப கருணை மேரு வேபார திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே. |
யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும், மன்மதனை எரித்தவரும், திரிபுரத்தை அழித்தவரும், சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும், கயிலைமலைக்கு இறைவரும், மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும், மூங்கிலின் கீழே தோன்றியவரும்*, கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய குருநாதரும், மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும், நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும், பூத கணங்களுடன் ஆடுபவரும், உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ யோகியும், பரம யோகியும், மகா கனம் பொருந்திய யோகியும், பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும், சொல்லுதற்கு அரிய மகா ஞானியும், பசுவை வாகனமாகக் கொண்டவரும், பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும், மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள் (சிவஞானபீடத்தில்) யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ? வேதங்களை அத்யயனம் செய்த பிரமன் மிகவும் அஞ்சி ஓடவும், மூதேவி அகன்று ஓடவும், மிக்க கோபம் கொண்டு, வடக்கே உள்ள மேருமலை சுழலவும், கடலிலே நெருப்பு பிடித்துக்கொள்ளவும், வாய் கிழிய அழுகை கலந்த ஓசையுடன் சூரன் மாயவும், ஏழு உலகங்களுடன் வட்டமான, திசைகளை மறைக்கும், சக்ரவாளகிரியும் சாயவும், பேய்க் கூட்டங்களுடன் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும், போர்க்களத்தை விரும்பிச் சென்றவனே, பரிசுத்தமான கடம்பமாலையை அணிந்தவனே, கருணையின் மேருமலையே, பெருமை மிக்க அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே.
* சிவபிரான் மூங்கிலின் அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் எனப் பெயர் கொண்டார் - திருநெல்வேலி தலபுராணம்.இப்பாடலில் முதற்பகுதி சிவனையும், பிற்பகுதி முருகனது போரையும் வருணிப்பது சிறப்பானது.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 577 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யோகியும், கையில், ஆடுபவரும், தானான, கொண்டவரும், பெரிய, ஓடவும், மிக்க, மூங்கிலின், ராரி, னோடு, திகிரி, பெருமாளே, தகிட, மூதேவி