பாடல் 576 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான |
கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக் களபசு கந்தமி குந்த கொங்கைக ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா இரதம ருந்தியு றுங்க ருங்கயல் பொருதுசி வந்துகு விந்தி டும்படி யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுறமூழ்கி இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய இளமைகி ழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ பரதசி லம்புபு லம்பு மம்பத வரிமுக எண்கினு டன்கு ரங்கணி பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப் பகடியி லங்கைக லங்க அம்பொனின் மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும் மருதமு தைந்தமு குந்த னன்புறு மருககு விந்தும லர்ந்த பங்கய வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி மலையில்வி ளங்கிய கந்த என்றுனை மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே. |
கையும், நகக் குறி கொண்ட கழுத்தும் ஒருங்கே எழுந்தும், சுருண்டு, வண்டு நெருங்கிய பெருமை வாய்ந்த கூந்தல் குலைந்து அசையவும், அதிக கனம் வாய்ந்த, கலவை நறு மணம் மிக்க தனங்கள் நெகிழ்ந்து அசையும்படியும் இணைந்து, காம மயக்கில் மயங்கி அன்பு காட்டும் கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் உண்டு, சோர்வு உற்று பஞ்சு மெத்தையின் மீது வீழ்ந்து, வாயூறு நீரைப் பருகி, பொருந்திய கரிய மீன் போன்ற கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்னும் குளத்தில் பொருந்தி முழுகி, இனிமை தரும் ஓர் இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த பொது மகளிர் வசம் ஈடுபட்ட என் இளமை முதுமையாக மாறிக்கொண்டு வரும்போதாவது உனது திருவடிகளைப் பெறும் வழியை உணர்ந்து கொள்வேனோ? பரத நாட்டியத்துக்கு அணிந்து கொள்ளும் சலங்கைகள் ஒலிக்கும் அழகிய திருவடிகளை உடையவனே, ஒளி பொருந்திய முகத்தை உடைய ஜாம்பவான் முதலான கரடிப் படையும் குரங்குப் படையும் ஏவல் புரிய போருக்குச் சென்று, முயற்சி செய்து மலை வரிசைகளின் இடையே போய், மோசக்காரனான ராவணனது இலங்கை கலங்கும்படி, அழகிய பொன்னாலாகிய கி¡£டங்களை அணிந்த பத்துத் தலைகளும் துணிக்கப்பட்டு, ஏழு உலகங்களும் நடுங்கும்படி பனம்பழம் போல் விழும்படி ஆக்கின (ராம)ரும், மருத மரங்களை ஒடிந்து விழ வைத்த (கண்ணனுமாகிய) திருமால் அன்பு வைத்துள்ள மருகனே, குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூரிலும், மணம் வீசும் சண்பக மலர்கள் விளங்கும் பெருமை வாய்ந்த விராலி மலையிலும்* விளங்கிய கந்தனே, என்றும் உன்னை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வந்தனை செய்கின்ற பிள்ளையாகிய அடியேனுடைய வழிவழியாக அன்பு செய்கின்ற பாடற் பணியை ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே.
* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில், மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 576 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, வாய்ந்த, தனதன, தந்த, அன்பு, பொருந்திய, தரும், அழகிய, செய்கின்ற, படையும், நிறைந்த, பெருமை, குந்த, கொண்ட, யன்புசெய், வண்டு, பெருமாளே, மணம்