பாடல் 574 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் ...; தாளம்
-
தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த ...... தனதான |
எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர் இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில் அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே. |
எதிரில் எதிரில் வருகின்றவர்களைக் கண்டதும் ஓடிச் சென்று (வருகின்ற) ஆட்களின் நிலையைத் திருட்டுத்தனமாகத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆசையை ஊட்டி, தடுக்கி விழும் குகை போன்ற இடத்தை காட்டுகின்ற இளம் மாதர்களுடைய பெண்குறி (காம நீரை) இறைப்பதற்கான கூடையைக் கொடுக்கின்ற கிணறு ஆகும். பழைய கழிவுப் பொருட்கள் ஒழுகும் துவாரம். ஆராய்ந்து பார்த்தால் இளம் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில் நிலைக்க முடியாத மிக்க பயங்கரமான துக்கம் விளைக்கும் சுழல். மிகவும் அழுகி விடுகின்ற கிழியுண்ட இடம். அழுக்கு சேரும் இடம். ஆடை மூடுகின்ற, கரு உண்டாகும் துவார வாசல். அருவி போல் நீர் பாய்கின்ற ஓட்டை. தகுதி அற்ற அடிப்பாகம் (ஆகிய) பாழ்பட்ட குழைச் சேற்றில் நான் அழுந்தாமல், (என்னை) ஆட்கொண்டு அருள்வாயே. விதுரன் பெரிய வில்லை எடுத்து, எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும் இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே, சந்திரன் தழுவும்படி உயர்ந்துள்ள சோலைகளோடு கூடிய, அதிக வளப்பம் உள்ள சந்தானம் என்னும் மரம் போல, தன்னை வழிபட்டோர்க்கு விரும்பியவற்றை வழங்கும் விராலி மலையில்* வீற்றிருப்பவனே, பாதி தூரம் வரை அன்பர்களை வரச் செய்து, அங்கு தெய்வ மணம் கமழும் சந்தான கோடு என்னும் இடத்தில் எழுந்தருளி இருந்து கொண்டு, அவர்கள் இச்சித்தவற்றை அருளும் பெருமாளே.
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 574 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பாதி, செய்த, தாத்த, தனதனனந், ஆகிய, பெரிய, என்னும், இருந்து, இடம், போர், எதிரில், யேற்றி, காட்டு, வழியருளின், பேறு, கொண்டு, பெருமாளே, இளம்