பாடல் 573 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதான தான தத்த தனதான தான தத்த தனதான தான தத்த ...... தந்ததான |
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும் தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர் தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர் குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே. |
உருப்போடுகின்ற எண்ணிக்கை நிரம்ப ஆகி மனத்தில் பதியும்படி ஜெபம் செய்து, கோடிக் கணக்கான வேள்வியால் வரும் பேறுகள் கூடிவர, சிவாகமத்து விதிகளை (சிவபூஜை செய்யும் முறைகளை) மகிழ்ச்சியுடன் அனுசரித்து விரும்பி, அறிதலும் ஆசையையும் யாரிடத்திலும் பொருந்த வைக்காமல், ஓரெழுத்தாகிய பிரணவத்தை எப்போதும் ஓதி, நாள் தோறும் (பிராணாயாம முறைப்படி) சுவாசத்தை விடுத்திருந்து, நிலைத்த ஞானம் இல்லாத அறிவினர் குரு என்னும் பதவியை வகிப்பார்கள். ஒரு சிலர் ஞானோபதேசத்தையும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஞான உபதேசம் பற்றுக் கோடு ஆகுமோ? நெற்றியில் புருவ மத்திய ஸ்தானத்தில் தியானித்தால், பெரு ஞான சித்தியைக் கொடுக்கும் என்றால், அவ்வாறு கொடுக்கின்ற அதை நான் கண்டேன் இல்லை. குருநாட்டை அரசாட்சி செய்த துரியோதனன் முதலியவர்களின் கூட்டம் முற்றும் அழியும்படி மாய வித்தைகளைச் செய்தவனும், குந்தி தேவியின் மைந்தர்களான பாண்டவர்களை அழிந்து போகாமல் நீதி முறையை நிலைப்படுத்தி, ஏழுலகங்களை ஆளும்படி வைத்தவனும், குட்டை வடிவினனான வாமனனாகி வந்து, கெடுதல் இல்லாத நீண்ட திரிவிக்ரம நருவத்தைக் கொண்ட ஆதி மூர்த்தியாகியும் ஆகிய திருமாலின் மருகனே, திரி புரத்தை எரித்தவனும், திருவிளையாடல்களைப் புரிந்தவனும் ஆன சிவபெருமானின் மகனே, அழகிய விராலி மலை* மேல் உலவுகின்ற சித்தனே, அழகிய கையில் வேல் ஏந்தியவனே, மதுராபுரியில் வீற்றிருக்கும் சொக்க நாதரின் உண்மையை விளக்கி**, பாண்டிய மன்னனின் சுரத்தைப் போக்கி, வளைவுபட்டிருந்த அவனது கூனை நிமிர்த்திய தம்பிரானே.
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
** சமணரோடு செய்த வாதில் சம்பந்தர் வெற்றி பெற்று சிவபெருமானது மெய்ம்மையை உலகுக்கு விளக்கி அருளினார். முருகன் சம்பந்தராக அவதரித்ததைக் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 573 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தத்த, இல்லாத, அழகிய, தம்பிரானே, செய்த, மகனே, சித்தி, நீதி, விராலி