பாடல் 571 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - தேஷ்;
தாளம் - ஆதி - கண்டநடை - 20
- எடுப்பு - அதீதம்
- எடுப்பு - அதீதம்
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனத் ...... தனதான |
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரியச் ...... சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் ...... குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் ...... றடைவேனோ இராகவ இராமன்முன் இராவண இராவண இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென் றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே விராகவ சுராதிப பொராதுத விராதடு விராயண பராயணச் ...... செருவூரா விராவிய குராவகில் பராரைமு திராவளர் விராலிம லைராஜதப் ...... பெருமாளே. |
நோய் இல்லாததும், பழமையானதும், எல்லாவற்றிற்கும் மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலை அற்றதும், முதன்மையான பேரொளியாக விளங்கி, ஆசையற்றதும், சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி, ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன், திருமால், பிரமன், தேவலோகம், மண்ணுலகம், இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள், இந்த எல்லா உருவங்களிலும் கலந்த முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல், பயனற்ற புகழைக் கொண்ட மற்றவருக்கு அடிமைப்பட்டு, முதலை போன்ற உள்ளத்தை உடையவரும் அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளை மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ? ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில் அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய உண்மை வரலாற்றை* உடைய சிவபெருமானின் திருக்குமரா, கலைகளுக்கு எல்லாம் தலைவனே, புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே, ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே, போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்ல வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே, திருப்போரூரில் உறைபவனே, கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும் பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்ற விராலிமலையில்** வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே.
* திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள் ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 571 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனாதன, திருமாலின், சிவன், திருமால், இராவண, என்பது, தாமரை, கண்ணையே, பெருமாளே, கொண்ட