பாடல் 570 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - மனோலயம் ;
தாளம் - ஆதி - கண்டநடை - 20
- எடுப்பு - அதீதம்
- எடுப்பு - அதீதம்
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன ...... தனதான |
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன ரியாவரு மிராவுபக ...... லடியேனை இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய சலாபவ மலாகர சசீதர விதாரண சதாசிவ மயேசுரச ...... கலலோக சராசர வியாபக பராபர மநோலய சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன நியாயப ரிபாலஅர ...... நதிசூடி நிசாசர குலாதிப திராவண புயாரிட நிராமய சரோருகர ...... னருள்பாலா விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே. |
பயனற்ற பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவ முனிவர்கள் எல்லோரும் இரவும் பகலும் என்னைக் குறித்து இவன் ஆசையும், விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும், ஈயாமைக் குணமும், காம மயக்கமும் இல்லாதவன், இவனும் ஓர் உத்தம புருஷன் எனக் கூறும் சொல் பொருந்தும்படிச் செய்து, இனிய குணத்தனே, தூய்மைக்கு இருப்பிடமானவனே, சந்திரனைத் தரித்தவனே(*1), கருணை நிறைந்தவனே, சதாசிவமாக இருப்பவனே, மஹேஸ்வரனே, எல்லா உலகங்களிலும் உள்ள இயங்குவன - நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவனே, பரம் பொருளே, மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை நான் பெறவேண்டும் என்று நீ நினைத்தருள்வாயாக. சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்(*2), கங்கைநதியையும் சூடியவரும், அரக்கர் குலத்துக்கு அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு(*3) செய்தவரும், நோயற்றவரும், தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே, வில்லையும் அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும் வேடர்களின் அற்புதப் புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே, மேன்மைமிகு வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும் விராலிமலையிலும்(*4) வாழ்கின்ற பெருமாளே.
(*1) முருகன் சிவனின் அம்சமாகையால் புலவர் சிவனையும் முருகனையும் வேறாகக் கருதவில்லை.
(*2) ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன் தோன்றினார் - சிவபுராணம்.
(*3) ராவணன் அகந்தையினால் சிவபிரானது கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். சிவனார் திருவடி நகத்தால் சிறிது ஊன்ற, வலி தாங்காமல் கதறி அழுதான். அதனால் அவனுக்கு ராவணன் (அழுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது.
(*4) கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 570 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனாதன, ஆதிசேஷன், ஆயிரம், ராவணன், போர், செய்யும், பிரான்மலை, பெருமாளே, குறித்து, சிவனார்