பாடல் 558 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
பெஹாக்; தாளம் - ஆதி
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக் கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய் பவனத் தையொடுக் குமனக் கவலைப் ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற் படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர் பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற் பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற் பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா சிவனுத் தமனித் தவுருத் திரன்முக் கணனக் கன்மழுக் கரனுக் ரரணத் த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி செகவித் தனிசப் பொருள்சிற் பரனற் புதனொப் பிலியுற் பவபத் மதடத் த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே. |
இந்தப் பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றில் கருவிலே தோற்றம் ஏற்பட்டு, விதியின் ஆட்சிப்படியே கூடுகின்ற துக்கத்தையும் சுகத்தையும் அநுபவித்து, இறந்தபின் உயிரை புரி அஷ்டகம்* என்ற சூக்ஷ்ம தேகத்தில் புகுத்தி, (யமலோகத்தில்) அந்த தேகத்தைக் கட்டி, அடி, குத்து என்றெல்லாம் பயத்தை உண்டுபண்ணி, அலறி அழும்படி புரட்டி எடுத்து, வருத்தப்படுத்தி, சூடான மணலை உடலெல்லாம் சொரிவித்து, நெருப்புக்குள்ளே அவ்வுடலைச் சூடேறும்படியாக விட்டு, உயிரைச் செக்கில் இட்டுப் பிழிய அரைத்து, வரிசையாக உள்ள பற்களை தட்டி உதிர்த்து, எரிகின்ற செம்பாலான உருவம் ஒன்றைத் தழுவும்படிச் செய்து, முட்களில் கட்டி இழுத்திட, வாயும் கண்ணும் கலங்கி அசையும்படியாக உதைத்து, மாமிசத்தை அறுத்து உண்ணும்படியாகச் செய்து, எலும்பை ஒடித்து, நொறுக்கி, வலிக்கும்படியாக காலில் விலங்கு பூட்டி, துன்பப்படுத்தும் யம தண்டனை என்ற துயரத்தை நீக்கி அருள்வாயாக. பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை ஒழித்து, ஐந்து புலன்களில் வேகமாகச் செல்கின்ற ஆசையை நீத்த, தவசீலர்களான சரியையாளர்கள் (*1), கிரியையாளர்கள் (*2), யோகிகள் (*3), ஞான (*4) முதிர்ச்சி கொண்டவர்கள், தியானம், துறவு மேற்கொண்ட பரிசுத்தர்கள், பற்றை நீக்கியவர்கள் இவர்களின் கருத்திலே வைத்துப் போற்றப்படும், வயலூர்ப்பதியில் வாழும் குருநாதனே, பரமனுக்கும் குருநாதனே, சிவபிரான், உத்தமன், அழிவில்லாத ருத்திரன், முக்கண்ணன், திகம்பரன் (திக்குக்களையே ஆடையாகப் புனைந்தவன்), மழு ஏந்திய கரத்தன், கடுமையான போர்க்களத்தில் திரிபுரத்தை எரித்தருளிய ஞான குணத்தவன், குணமில்லாதவன், ஆதி மூர்த்தி, உலகுக்கு வித்தான மூலப் பொருளானவன், உண்மைப் பொருளானவன், அறிவுக்கு எட்டாதவன், அற்புதன், தனக்கு உவமை இல்லாதவனாகிய சிவபெருமானிடத்தே தோன்றியவனே, தாமரைத் தடாகங்கள் உள்ள திரிசிராப்பள்ளி மலை மேல் அமரும் நல்ல குமரப் பெருமாளே.
* புரி அஷ்டகம்: ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவையோடு மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் சேர்ந்து ஆக மொத்தம் எட்டும் கூடிய தேகம். யமதூதர்கள் கொண்டு போகும் உடல் இதுதான்.
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 558 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், மார்க்கம், தொழில், உடல், இடுதல், பொருளானவன், ஞானம், செய்து, பெருமாளே, குமரப், புரி, கட்டி, உள்ள, குருநாதனே