பாடல் 556 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
ஸிந்து பைரவி; தாளம் - அங்கதாளம் - 6
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தத்த தானா தனாதன தத்த தானா தனாதன தத்த தானா தனாதன ...... தந்ததான |
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும் பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில் பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ் பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய் அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே. |
ஞான சக்தி வேலைக் கரத்தில் ஏந்தியவனே, போற்றி போற்றி, முக்தியைத் தரவல்ல ஞான பண்டிதா, போற்றி போற்றி, தத்துவங்களுக்கு முதல்வனாய் நிற்பவனே, போற்றி போற்றி, சிவதத்துவமாகிய விந்து, சக்தி தத்துவமாகிய நாதம் இரண்டிற்கும் சத்தான உண்மை உருவம் வாய்த்தவனே, போற்றி போற்றி, மணிவிளக்கைப் போல் ஒளிர்பவனே, போற்றி போற்றி, தனக்குத் தானே நிகரான கீர்த்தியை உடையவனே, போற்றி போற்றி, என்று பாடித் துதிக்கும் பக்தியை மேற்கொள்ளாமல், இவ்வுலகிலே மான் போன்ற பெண்களது ஜவ்வாது, அகிற்சாந்து, பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைப் பூசிய மார்பிலே வீழ்ந்து கிடக்கின்ற திருட்டு மாடாகிய நான் உந்தனை விட்டுப் பிரியாமல் இருக்க, உலகிற்கெல்லாம் நலம்தரும் தாமரை போன்ற உன்சிறந்த பாதங்களை இனியாகிலும் நீ என்முன் எழுந்தருளி வந்து தந்தருள்வாயாக. அஸ்திர (ஆயுத) தேவதையாகிய வேலாயுதத்தை ஏந்தியவனே, தேவர்களுக்கு மிக உக்கிரமான சேனாதிபதியே, தூய்மையாக மந்திர நீரோடு சோமரசத்தைப் பிழிந்து செய்யப்படும் யாகத்தில் குரு மூர்த்தியாக தொன்றுதொட்டு நின்று வருபவனே, அர்ச்சனைகளிலும், மந்திரத்தால் வரவழைக்கப்படுவதிலும் வந்தருள்வோனே, வயலூரில் வாழ்கின்ற எங்கள் நாயகனே, திருப்புயங்களில் ருத்திராட்ச மாலைகளை அணிந்துள்ளவனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, அழகும் ஆடம்பரமும் உடையவனே, வீர லக்ஷ்மியாகிய பார்வதிக்குப் பிறந்தவனே (ஜாதா), இனிமை வாய்ந்தவனே (ரஸா), திசைகள் பலவற்றையும் காப்பவனே, சிவ தத்துவத்தை விளக்கும் ஆகம நூல்களை உபதேசிக்கும் குருவே, ஞானிகளுக்கெல்லாம் தலைவனே, திரிசிராமலையின் அப்பனாகிய தாயுமானவருக்கும் குரு ஸ்வாமியே, சிறந்த விரதங்களோடும், தர்ப்பைப் புல்லுடனும், ஆசாரத்துடனும் உள்ள அந்தணர் அனைவருக்கும் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 556 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, தனாதன, தத்த, தானா, குரு, தலைவனே, உடையவனே, சக்தி, தகிட, ஏந்தியவனே