பாடல் 555 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
ஆனந்த பைரவி - மத்யம ஸ்ருதி ; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தந்தன தனன தானன தத்தன தந்தன தனன தானன தத்தன தந்தன ...... தனதான |
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல் கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர் குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை ...... பொருகாடை குயில்பு றாமயில் குக்கில்சு ரும்பினம் வனப தாயுத மொக்குமெ னும்படி குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப் பவள ரேகைப டைத்தத ரங்குறி யுறவி யாளப டத்தைய ணைந்துகை பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின் படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ அவச மாய்வட பத்ரநெ டுஞ்சுழி படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ தவள ரூபச ரச்சுதி யிந்திரை ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை சகல காரணி சத்திப ரம்பரி யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி சிவைம நோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்நஅ லங்க்ருத திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே. |
குவளை மலர் போன்றும், போர் புரியும் அழகிய கயல் மீன் போன்றும், விஷம் போன்றும் உள்ள மை தீட்டிய கண்களை உடைய (விலை) மாதர்களின் குமுதம் போன்ற வாயிதழ் அமுதத்தைப் பருகி, ஒலி பொருந்தும் காடை, குயில், புறா, மயில், செம்போத்து, வண்டு, அன்னப்பறவை, அழகிய கோழி இவைகளின் குரலை நிகர்க்கும் என்று சொல்லும்படியான தங்கள் குரலைக் காட்ட, இரண்டு அழகிய மார்பகங்களும் இன்பத்தில் சிலிர்க்க, பவள ரேகை போன்ற வாயிதழ் குறி (உடலெங்கும்) உண்டாக, பாம்பின் படம் போன்ற பெண்குறியை அணைந்து, கைகளால் தொட்டும் தட்டியும், உடலால் செய்யும் தொழிலை காம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட முறைப்படி செய்து, உருக்கிக் கூடி தன்வசம் இழந்து, ஆலின் இலை போன்ற வயிற்றின் தொப்புள் சுழலிலே முழுகுகின்ற காமக் கடலில் அழுந்துதலைத் தவிரேனோ? வெண்ணிறம் கொண்ட சரஸ்வதி, லக்ஷ்மி, ரதி, இந்திராணி, கிருத்திகை மாதர் அறுவர், அரம்பையர்கள் ஆகியோரால் வணங்கப்படும் துர்க்கா தேவி, பயங்கரி, புவனேஸ்வரி, எல்லா காரியங்களுக்கும் காரணமாக இருப்பவள், சக்தி, முழு முதலாகிய தேவி, இமய மலை அரசனின் மகளான பார்வதி, ருத்ரி, மாசற்றவள், சமயங்களுக்குத் தலைவி, உருவம் இல்லாதவள், கிரியா சக்தியானவள், எம் தாய், சிவனின் தேவி, மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், அறிவு ரூப ஆனந்த அழகி, கெளரி, வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள், அம்பிகை, திரிபுரங்களை எரித்தவள், சியாமள நிறம் கொண்டவள் (ஆகிய பார்வதி) அன்புடன் ஈன்றருளிய முருகனே, மலை உச்சியும், அழகிய மண்டபங்களும், மகர மீனின் வடிவமைந்த அலங்காரத் தோரணங்களும், ரத்ன சிங்காரங்களும் நிரம்பிய திரிசிரா மலையில் எழுந்தருளியுள்ள தந்தை சிவபெருமான் வணங்கிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 555 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தேவி, போன்றும், பார்வதி, தந்தன, தகதிமி, தானன, தத்தன, வாயிதழ், குவளை, ஆனந்த, பெருமாளே