பாடல் 553 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதான |
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செங்கை ...... யுறவாடி ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடி ரண்டு ...... முரையாரை மருவமிக அன்பு பெருகவுள தென்று மனநினையு மிந்த ...... மருள்தீர வனசமென வண்டு தனதனன வென்று மருவுசர ணங்க ...... ளருளாயோ அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி அடிதொழவி ளங்கு ...... வயலூரா திருவையொரு பங்கர் கமலமலர் வந்த திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார் திகுதகுதி யென்று நடமிட முழங்கு த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே. |
ஒருவரோடு கண்களைக் கொண்டும், ஒருவரோடு மார்பகங்களாலும், ஒருவரோடு கைகளைக் கொண்டும் உறவாடி, ஒருவரை மனத்தில் வைத்து விரும்பியும், ஒருவரை இகழ்ந்து பேசி வெறுத்தும், ஒருவரோடு விருப்பு, வெறுப்பு இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற விலைமாதரை அணைவதற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று மனத்தில் நினைக்கின்ற இத்தகைய மோக மயக்கம் நீங்க, தாமரை என்று நினைத்து வண்டுகள் தனதனன என்ற ஒலியுடன் சுற்றி வருகின்ற உன்னுடைய திருவடிகளை அருளமாட்டாயா? பாம்பு தன்னை எதிரில் கண்டதும் மிகவும் நடுநடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமை வாய்ந்த மயில்மீது ஏறும் வீரனே, தேவர்கள் முதல் அடியார்களும், முனிவர்களும் உன்னை வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில் வாழ்பவனே, லக்ஷ்மியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும் மகிழும்படியாக சிவபெருமான் திகுதகுதி என்று நடனமிட, முழவு வாத்தியங்கள் முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 553 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஒருவரொடு, தனதனன, ஒருவரோடு, தந்த, தாமரை, ஒருவரை, மனத்தில், பெருமாளே, வந்த, திகுதகுதி, கொண்டும்