பாடல் 550 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன தனதன தானான தானன ...... தந்ததான |
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும் அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள் அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள் அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும் விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும் விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள் வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய் மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர் மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச் செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும் திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர் சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே. |
மேலும் மேலும் அழுது ஒழுக்கம் வாய்ந்த நட்பு உள்ளவர்கள் போல் பொய் வழியிலேயே சூழ்ச்சி செய்யும் மூடப் பெண்கள், தம் மீது ஆசைப்படும் காமாந்தகர்கள் தமக்குப் பொருள் கொடுக்காத நாளில் அவர்களோடு வாய் பேசாதிருத்தலும் கோபித்தலும் நீங்காத குற்றம் உடையவர்கள், எல்லை இல்லாத பொருள் ஆசை கொண்ட பொது மகளிர், விஷம் தோய்ந்துள்ள கண்களால் மாட வீதிகளில் தம் மார்பகங்களை ஆராயாமல் எவர்க்கும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர், நற் குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசு என்று சொல்லும்படி கூச்சலிட்டுக் கூத்தடிப்பவர், விகாரத்தினர், (இத்தகையோரின்) சூழ்ச்சிச் செயல்களால் என் உயிர் வருந்தலாமோ? நன்வழியில் வாழ்வதற்கான ஞானோபதேசம் செய்யவல்ல பரம சுவாமியே, தேவர்கள் பெற்ற வரத்தால் தோன்றியவனே, வயலூரில் அமர்ந்த வேலாயுதனே, மலைத்தலம் எங்கும் மகிழ்வுடன் வீற்றிருப்பவனே, மதுரையாகிய திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் சுமார் எண்ணாயிரம் பேர் அழிபட்டு கழுவின் மீது ஏற, திருநீறு பரந்து விளங்க, பாண்டிய அரசனும் அடிமைப்பட, வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த சீகாழிப் பெரிய முனிவரும், சிவசிவ மகாதேவா, காத்தருள் என்று (சிவபெருமானிடம்) சென்று பாடின பெருஞ் செல்வம் பெற்றவருமான ஞானசம்பந்தரே, தீது இல்லாதவரும், உமையை ஒரு பாகத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவபெருமானது திரிசிர மலையில் வாழ்வு கொண்டிருப்பவனே, தேவர்களின் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 550 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, தானான, பொருள், இல்லாத, மீது, தேவர்கள், சிவசிவ, தம்பிரானே, மேலும்