பாடல் 549 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன ...... தனதான |
அரிவையர் நெஞ்சுரு காப்புணர் தருவிர கங்களி னாற்பெரி தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந் தகிலொடு சந்தன சேற்றினில் முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப் பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரியம ருங்குடை போய்ச்சில பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப் பனிமுக முங்குறு வேர்ப்பெழ இதழமு துண்டிர வாய்ப்பகல் பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ சரியையு டன்க்ரியை போற்றிய பரமப தம்பெறு வார்க்கருள் தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே சயிலமெ றிந்தகை வேற்கொடு மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா திரிபுவ னந்தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே தெரியஇ ருந்தப ராக்ரம உருவளர் குன்றுடை யார்க்கொரு திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே. |
(விலை) மாதர்கள் மீது மனம் உருகி கலவி இச்சை தருகின்ற விரகதாபத்தால் மிகவும் தன்வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, நெருங்கிய மார்பகங்களின் மேல் விழுந்து, அகில், சந்தனம் இவற்றின் கலவைச் சேற்றில் முழுகியும் எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறைபோல (உடலில்) படும்படி பதித்து விளையாடி, நறு மணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிந்து விழ, இடையில் இருந்த சேலை விலக, சில பறவைகளின் ஒலிகள் எழ, கயல் மீன் போன்ற கண்கள் சோர்வு அடைய, குளிர்ந்திருந்த முகத்தில சிறு வியர்வை எழ, வாயிதழ் அமுதை உண்டு, பகலிலும் இரவிலும் கலவிக் கூத்தாடும்படி செய்த இந்தக் கொடியவனை கைவிடலாமோ? சரியை, கிரியை* ஆகிய மார்க்கங்களை கைப்பிடிக்கும் மேலான பதத்தைப் பெற விரும்புவோர்க்கு அருளைத் தருகின்ற கண்ணன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட மேன்மையாளனாகிய (ரங்கநாதனாம்) திருமாலின் மருகனே, கிரெளஞ்ச மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**, மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த வீரனே, அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் 'அதல சேடனார் ஆட' என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 549 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மார்க்கம், தாத்தன, தந்தன, இடுதல், தொழில், அருணகிரியார், மயில், ஞானம், மேல், பெருமாளே, காட்டிய, மீது, தருகின்ற, செய்த, சரியை