பாடல் 551 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் ...... தனதான |
இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற் றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார் இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித் திதழமு துந்துய்த் ...... தணியாரக் களபசு கந்தப் புளகித இன்பக் கனதன கும்பத் ...... திடைமூழ்குங் கலவியை நிந்தித் திலகிய நின்பொற் கழல்தொழு மன்பைத் ...... தருவாயே தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற் சதுமறை சந்தத் ...... தொடுபாடத் தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித் தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற் சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத் திரிசிர குன்றப் ...... பெருமாளே. |
வாலிபர்களுடைய மனதுக்கு விலங்கு என்று சொல்லத் தக்க சிற்றிடையைக் கொண்ட வஞ்சிக் கொடியைப் போன்ற பொது மகளிருடைய பாதங்களை வணங்கி, அழகிய பெண்குறியைக் கிளர்ச்சியுறச் செய்து, வாய் இதழ் அமுதைப் பருகி அனுபவித்து, அணியான முத்து மாலையும் கலவைச் சாந்தின் நறு மணமும் புளகிதம் கொண்ட இன்பம் தருவதுமான கனத்த மார்பகக் குடத்தின் மத்தியில் முழுகும் புணர்ச்சி செய்வதை வெறுத்துத் தள்ளி, விளங்குகின்ற உனது அழகிய திருவடியை வணங்கும் அன்பைத் தந்தருளுக. சோர்வு இல்லாத அடியார்களுடைய மனம் என்னும் நடன சாலையில் நான்கு வேதங்களும் சந்தத்துடன் முறையாகப் பாட, தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி என்னும் கொட்டு முழக்கத்துடன் நடனம் செய்து, தெளிவு பெறும் வண்ணம் வந்து இருந்து விளங்கும் சிவபெருமானுடைய அன்புக்கு உரிய குழந்தையே, மாலை அணிந்த அழகிய மார்பனே, செழுமையான மறைகளை அழகாகச் ஒலிக்கின்ற சிலம்பை அணிந்தவனே, வலிமை வாய்ந்த திரிசிராப்பள்ளி மலையில் உறையும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 551 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், தனதன, அழகிய, என்னும், கொண்ட, செய்து, திந்தித், வஞ்சிக், தரிகிட, திரிகிட, பெருமாளே