பாடல் 547 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்த தாத்தன தத்தத் தானன தந்த தாத்தன தத்தத் தானன தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான |
அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய கொங்கை காட்டிம றைத்துச் சீரிய அன்பு போற்பொய்ந டித்துக் காசள ...... வுறவாடி அம்பு தோற்றக ணிட்டுத் தோதக இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம் அன்றில் போற்குர லிட்டுக் கூரிய ...... நகரேகை பங்க மாக்கிய லைத்துத் தாடனை கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர் பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ...... லியல்பாகப் பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள் தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும் இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் ...... முடிவேறாய் இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா செங்கை வேற்கொடு துட்டச் சூரனை வென்று தோற்பறை கொட்டக் கூளிகள் தின்று கூத்துந டிக்கத் தோகையில் ...... வரும்வீரா செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் ...... பெருமாளே. |
அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த மார்பகத்தைக் காட்டியும் மறைத்தும், சிறந்த அன்புள்ளவர்கள் போல் பொய் வேடத்துடன் நடித்தும், கொடுத்த பொருளுக்குத் தக்கவாறு உறவு காட்டியும், அம்பும் தோற்கும்படியான (கூர்மையான) கண்களால் மயக்கியும், வஞ்சகம் நிறைந்த காம இன்ப சாத்திரங்களை எடுத்துப் பேசியும், குயில் அன்றில் பறவை இவைகளைப் போல புட்குரலைக் காட்டியும், கூர்மையான நகம் கொண்டு காயப்படுத்தி அலைத்தும், காம சாத்திர முறையில் தட்டுதல் செய்தும் காம ஆசையை எழுப்பி, நாடி வருகின்ற காமுகரைத் தமது வசப்படும்படி செய்து, தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச் செய்து, முதலிலிருந்தே இரவும் பகலும் சுற்றி அலைக்கும் சூதுக்கார வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக. எங்கும் நிறைந்தவனாய், குறை இல்லாதவனாய், அறிவே வடிவு உடையவனாய், பரிசுத்த அன்பர்கள் அடையும் இன்பப் பொருளாய், புகழ் கொண்டவனாய், முப்பத்தாறு தத்துவங்களின் * முடிவுக்கும் வேறானவனாய், இந்திரன் முதலிய கூட்டத்துத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி சிறந்த (சரவணபவ) மந்திர ரூப பூஜை செய்து தாமதம் இல்லாமல் வாழ்த்திய தேவ லோகக் காவலனே, வயலூர்த் தெய்வமே, திருக்கையில் உள்ள வேலைக் கொண்டு துஷ்டனாகிய சூரனை வெற்றி கொண்டு, தோலாலாகிய பறைகள் கொட்ட, பேய்கள் அசுரப் பிணங்களை உண்டு கூத்தாடி நடிக்க, மயிலின் மேல் வரும் வீரனே, செம் பொன்னால் விளங்கும் அழகிய கோபுரத்தின் மீது மேகங்கள் இரவும் பகலும் நிரம்பச் சூழ்ந்துள்ள அழகிய திரிசிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.
* 36 பரதத்துவங்கள் (அகநிலை):ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 547 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, செய்து, காட்டியும், அழகிய, தந்த, தத்துவம், தாத்தன, தத்தத், தானன, இன்ப, இரவும், உள்ள, கூர்மையான, மேல், பகலும், சூரனை, ராப்பகல், அன்றில், பார்வதி, வாழ்த்திய, பெருமாளே, சிறந்த