பாடல் 546 - மயிலம் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா ...... தனதான |
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே. |
கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம் நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ, குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ என்று சொல்லக் கூடிய மாதர்களின் குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே, கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே, பல விதமாக மனம் கலங்கி, நெருப்பு உலையில் பட்ட நல்ல மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகத்துக்கும்* ஈடாகி, பிணியால் அழிவேனோ? கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக. அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து ஓலமிட, பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும் அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே, சுயம் பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச் செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே, ஒப்பற்ற ஒருவனே, வேற்று வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள் வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல் ஆசை கொண்டு, மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து வணங்கிய குமரேசா. அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப் பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே, மயிலம்** என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** மயிலம் அதே பெயருடைய ரயில் நிலையத்துக்கு 3 மைலில் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 546 - மயிலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, மீனோ, தனதந்த, உள்ள, கோகோ, தானன, கையில், வீசும், பெரிய, வாய்ந்த, நிறைந்த, என்னும், கொண்டு, பெருமாளே, பாதக, வாளோ, மானோ, யாலே, குளிர்ந்த, குமரேசா, நெருப்பு