பாடல் 54 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .....
தனதன தனதன தனதன தன தந்தத் ...... தனதானா |
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் ...... தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் ...... றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி நின்றுற் ...... றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுற நின்பற் ...... றடைவேனோ சிலையென வடமலை யுடையவர் அருளிய செஞ்சொற் ...... சிறுபாலா திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த செந்திற் ...... பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி ரும்பிப் ...... புணர்வோனே விருதணி மரகத மயில்வரு குமரவி டங்கப் ...... பெருமாளே. |
கொலை செய்யும் மத யானைக்கு ஒப்பானதும், கஸ்தூரி அணிந்ததும், குடம் போன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்களின் குமுத மலர் போன்றதும், அமுதம் தருவதுமான வாயிதழ் ஊறலைப் பருகி, மனம் உருகி மோக மயக்கம் கொண்டுள்ள நாயேனுடைய நல்ல நிலையை அழிக்கின்ற கவலைகள் எல்லாம் நீங்குமாறு, உனது அருட் பார்வையில் நின்று நிலை பெறுவதற்கு, உன்னுடைய இரண்டு திருவடி மலர் இணைகளை மனத்தில் இருக்கச் செய்ய உன் மீது பற்றைப் பெறுவேனோ? வில்லாக வடக்கில் உள்ள மேரு மலையைக் கொண்டவராகிய சிவபெருமான் பெற்ற, செவ்விய சொற்களை உடைய, சிறு குழந்தையே, அலை கடலின் நடுவே நின்ற சூரனை வதைத்த திருச்செந்தூர் நகர் வேலவனே, வில்லுக்கு நிகரான நெற்றியை உடைய, (ஐராவதம் என்ற) யானை போற்றி வளர்த்த மயில் போன்ற தேவயானையையும், குறப் பெண்ணாகிய வள்ளியையும் விரும்பி மணம் புரிந்தவனே, வெற்றிச் சின்னம் அணிந்த பச்சை மயிலில் ஏறி வரும் குமரனே, சுயம்பு மூர்த்தியாக வந்த பெருமாளே.
* 'டங்கம்' என்றால் உளி. 'விடங்கம்' என்றால் உளியால் செதுக்கப்படாமல் தான்தோன்றியாக, 'சுயம்புவாக' வந்த மூர்த்தி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 54 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தனதன, வந்த, என்றால், மலர், போன்றதும், கவலைகள், பெருமாளே