பாடல் 539 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் ...... தனதான |
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ் சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந் தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் ...... தருள்வாயே அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண் டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன் அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங் கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந் திசையொன்ற மந்திசந் ...... துடனாடும் வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம் வரநின்று கும்பிடும் ...... பெருமாளே. |
தலை என்னும் உறுப்பு, அழகிய கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல் சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர், சிவந்த நெருப்பில் வெந்து உயிர் பிரிதல் உறும்படி, சீக்கிரத்தில் நமன் போரிட வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு முன்பு தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக. (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி, நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப் பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க, அன்று கோபித்து (அவனைக்) கொன்ற வேலனே, தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட, வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க, குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி) மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின் பாதத் தாமரை வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 539 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதந்த, வந்து, தந்தனம், தாமரை, வள்ளி, ஒலிக்க, முன்பு, அழகிய, பெருமாளே, அருள்