பாடல் 537 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தய்யதன தந்த தய்யதன தந்த தய்யதன தந்த ...... தனதான |
அல்லசல டைந்த வில்லடல நங்கன் அல்லிமல ரம்பு ...... தனையேவ அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லையமது கிண்ட ...... அணையூடே சொல்லுமர விந்த வல்லிதனி நின்று தொல்லைவினை யென்று ...... முனியாதே துய்யவரி வண்டு செய்யமது வுண்டு துள்ளியக டம்பு ...... தரவேணும் கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த கல்விகரை கண்ட ...... புலவோனே கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று கல்லலற வொன்றை ...... யருள்வோனே வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று வள்ளியைம ணந்த ...... பெருமாளே. |
மாலைப் பொழுதினில் வந்து சேர்ந்த, வில்லை ஏந்திய வெற்றி பொருந்திய, மன்மதன் தனது அல்லி மலர்ப் பாணத்தைச் செலுத்த, பிறைச்சந்திரனும் நெருப்பை அள்ளி வீச, தென்றற் காற்றும் (அங்ஙனம் நெருப்பு வீசுவதால்) தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயத்தைக் கிளப்ப, படுக்கையில் (ஊராரின் அலர்ப் பேச்சுக்களால்) பேசப்படுபவளும், தாமரையில் வசிக்கும் லக்ஷ்மி போன்றவளுமான இப்பெண் தனிமையில் இருந்து, என் பழ வினையால் இங்ஙனம் வாடுகிறேன் என்று தன்னைத் தானே வெறுக்காமல், பரிசுத்தமான ரேகைகளை உடைய வண்டு சிவந்த தேனை உண்டு துள்ளுகின்ற (உனது) கடப்ப மாலையைத் தர வேண்டும். (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி விளங்கிய புலவனே, தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில் சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம் இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே. வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்** போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.
* வித்வத் தாம்பூலம் யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் - கந்த புராணம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, தென்றல், ஊராரின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 537 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வள்ளி, தந்த, தய்யதன, மலர்ப், உனது, மன்மதன், ஊராரின், வள்ளிமலை, வண்டு, ரிந்த, அன்று, பெருமாளே