பாடல் 536 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - ஆனந்த
பைரவி; தாளம் - ஆதி 2 களை - 16
தனதன தனதன தனதன தனதன தய்யத்த தாத்த ...... தனதான |
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு கனலெழ மொழிதரு சினமென மதமிகு கள்வைத்த தோற்பை ...... சுமவாதே யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே ம்ருகமத பரிமள விகசித நளினநள் வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா விடதர குடிலச டிலமிசை வெகுமுக வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே வகுளமு முகுளித வழைகளு மலிபுன வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும் வனசரர் மரபினில் வருமொரு மரகத வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. |
ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான வீடு, நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக. கஸ்தூரியின் வாசம் வீசும், நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும் வெள்ளை நிறத்தளான ஸரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது ஆயிரம் முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே, மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும் வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 536 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்றும், மீது, வள்ளி, அந்தப், யான், வள்ளிக்கு, வாய்த்த, பெருமாளே, ஒப்பற்ற