பாடல் 532 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த ...... தனதான |
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக் கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன் உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே. |
செய்யத் தக்கதை அறிந்து அதன்படி வாழும் இந்த மெய்யான வாழ்க்கையை விட்டுவிட்டு, பொய்யான வாழ்க்கையைப் பார்த்து அதில் மோகம் கொண்டு, கல்லைப் போன்ற கடினமான வஞ்சக உள்ளத்தை உடைய பொது மகளிர்மேல் விழுந்து, (அவர்களுடைய) கள்ளத்தனம் பொருந்திய மார்பகங்களின் மேல் பொருந்தி, உய்யும் வழியில் சேராது நின்று, வஞ்சகருடனும், தந்திரம் நிறைந்த பொய்யர் கூட்டத்துடனுமே கலந்து சோர்வடைந்து, உள்ளம் குலைகின்ற நாயைப்போன்ற எனக்கு மனதில் பெறுதற்கு அரிய செல்வமாக நினைத்து, சோர்வு அடையாமல் எப்போதும் நிலைத்துள்ள மனப் பக்குவத்தை (அடைய) ஓர் உபதேச மொழியைச் சொல்ல மாட்டாயோ? சந்தேகம் இல்லாத, ஐந்து எனப்படும் பொய்யாத வகையில்+ (கேட்டதைத் தரும்) கற்பக மரச் சோலையில் தங்கி வளர்ந்த தெய்வ மகள் தேவயானையின் மார்பகங்களை அணைவோனே, இரவைப் பொறுக்காமல் கூவி ஒலிக்கும் சொல்லை உடைய வலிமையான சேவல் ஒன்றை வைத்துள்ள வெற்றிக் கொடியைக்கொண்ட வல்லமை படைத்த வேலனே, உலகம் முழுமையும் ஓடி வலம் வந்தும், ஐந்து திருக் கரங்களைக்கொண்ட கணபதிக்கு (கனியைக்) கொடுத்த தந்தையாகிய சிவபெருமானுக்கு (அவர் நீதி தவறியபோதிலும்) உண்மைக்குப் பொருந்திய பிரணவ மந்திரத்தை நீதி முறையில் தெரிவித்த பெரியோனே, வள்ளிக் கொடிகள் நிறைந்துள்ள வள்ளி மலை** மேல் ஏறிச் சென்று, வள்ளி நாயகியைத் தேடி அவள்மீது மோகம்கொண்ட பெருமாளே.
* தேவலோகத்தில் இருந்த ஐந்து பொய்யற்ற மரங்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 532 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஐந்து, தய்யத்த, வள்ளி, நீதி, நின்று, தந்த, உடைய, மேல், பெருமாளே, பொருந்திய, வள்ளிக்கு, பொய்யற்ற, கொண்ட, மெய்யொத்த, பெரியோனே, சென்று