பாடல் 531 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் ...... தனதான |
ஐயுமுறு நோயு மையலும வாவி னைவருமு பாயப் ...... பலநூலின் அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப் பொய்யுமக லாத மெய்யைவள ராவி உய்யும்வகை யோகத் ...... தணுகாதே புல்லறிவு பேசி யல்லல் படு வேனை நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே மெய்யபொழில் நீடு தையலைமு நாலு செய்யபுய மீதுற் ...... றணைவோனே வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே வையமுழு தாளு மையமயில் வீர வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. |
கோழையும், அதனால் ஏற்படும் பல நோய்களும், மோகங்களும், ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளும், பல கலை நூல்களும், அவற்றின் சூழ்ச்சிகளும் ஆகிய சேற்றைத் தாண்டாது, துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகிற உள்ளமும், மனை வாழ்க்கையையே எண்ணுகின்ற ஆசையும், பொய்யும் நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான நல்ல யோக வழிகளை நான் அணுகாமல், இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசித் துன்பம் அடைகின்ற என்னை உனது நல்ல திருவடிகளில் சேர்த்தருள்வாயாக. மெய்யனே, வள்ளிமலைச் சோலையில் நீண்ட நேரமாக வள்ளியை உன் பன்னிரு சிவந்த புயங்களாலும் இறுகத் தழுவுவோனே, வெள்ளையானை ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனின் சுற்றமாகிய தேவர்கள் வாழ, கடலினிடையே பல காலம் முதுமையான மாமரமாக நின்ற சூரனுடன் போர் புரிந்தவனே, உலகெல்லாம் முழுமையாக ஆளும் ஐயனே, மயில் வீரனே, வல்லம்* என்னும் திருத்தலத்தில் உள்ள முருகனே, முத்தமிழ்க் கடவுளே, வள்ளிக் கொடி படரும் மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில்** வாழும் வள்ளியின் மணவாளப் பெருமாளே.
* வல்லம் என்னும் திருவல்லம் வள்ளிமலைக்குத் தெற்கே 9 மைலில் உள்ளது.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 531 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தய்யதன, உள்ள, உள்ளது, என்னும், நல்ல, வள்ளிமலை, பெருமாளே