பாடல் 533 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த ...... தனதான |
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள் பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள் முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம் எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே. |
முல்லை மலர்ப் பாணத்துக்கும், மன்மதனுடைய அழகிய கையில் ஏந்திய (கரும்பு) வில்லுக்கும், பெண்களின் வசைப் பேச்சுக்கும் மனம் வாடி, இன்பத்தை அடைய முயன்று, அதனால் நீண்ட முள் தைத்த கால் போல மடங்கிக் கிடந்து, (துன்பக்) கொள்ளி நெருப்பில் முழுகி (உள்ளம்) வெந்து, கீழ் நிலையில் விழுவதோடு, ஒப்பற்ற ஞான எல்லையையும், வேதங்கள் சொல்லித் தொழுது வணங்கும் எல்லையையும் விலகித் தாண்டி நின்று, உன்னுடைய அருள் பாலிக்கும் திருநாமத்தை இகழ்ந்து பேசுதற்கும் ஆசை கொண்டு, (தமது) மனத்தில் கடவுளே அபயம் என்ற எண்ணம் பெறாதவர்களாய் இருக்கின்ற (கீழ் மக்களின்) நட்பை விட மாட்டேனோ? இருளில், அந்த யானையாகிய கணபதி கொடுத்து உதவிய கொடி போன்ற வள்ளிக்கு, அவளுடைய மார்பு விளங்கும்படி தாமரையாகிய உன் மார்பிலிருந்த மாலையை அணிவித்தவனே, சேறு படாத கங்கை ஆற்றில் உள்ள சரவணப் பொய்கையில் தங்கி, (அங்கு) மெல்ல தாமரை மலரில் வீற்றிருக்கும் தலைவனே, திருவல்லம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரனே, கந்தனே, சிதம்பரத்தில் உறைபவரும் திரிபுரத்தை எரித்தவருமான சிவபெருமானுக்கு மைந்தனே, மல் யுத்தப் போருக்கு எப்போதும் ஆயத்தமான பன்னிரண்டு புயங்களைக் கொண்ட வீரனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின்* மேல் சென்று, வள்ளி அம்மையின் மீது விருப்பம் கொண்ட பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 533 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்ட, வள்ளி, தய்யத்த, வள்ளிக்கு, கீழ், எல்லையையும், வீற்றிருக்கும், வாடி, பெருமாளே, வெந்து, தங்கி, வாவி, மீது, சென்று, கங்கை