பாடல் 526 - திருவேங்கடம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதான தனத்த தனத்த தனத்த தனத்தன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற் றறன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர் செருகிடு பரிமள நிறையுறை மதுகர ...... நெடிதாடி நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற் றொப்புக் கொப்புக் குயர்வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும் வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட் டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன் மதசிலை யதுவென மகபதி தனுவென மதிதில தமும்வதி ...... நுதன்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொற்பக் கத்திச் சையனாகி மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத மலரல திலைநிலை யெனமொழி தழியமெய் வழிபட லொழிவனை ...... யருள்வாயே நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத் துட்டக் கட்டத் தசிகாண நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில் நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில் நகைமுக திருவுறை ...... மணிமார்பன் நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத் தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த நரகரி யொருதிரு ...... மருகோனே கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப் பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு கனதன பரிமள முழுகுப னிருபுய கனகதி வியமணி ...... யணிமார்பா கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக் கக்கொட் டசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு கடவட மலையுறை ...... பெருமாளே. |
(பாடலின் முதல் 15 வரிகள் மாதரின் கூந்தலையும் நெற்றியையும் வருணிக்கின்றன). தேன் பொருந்திய பிச்சி மலரின் குளிர்ச்சியை உடையதாய், கச்சிதமாக முடியப்பட்டதாய், கரு மணலை ஒத்ததாய், சுருண்டு மணமுள்ளதாய், இருளை அச்சுறுத்தும் கருமை கொண்டதாய், வாசனை மலர்களை வரிசையாகச் செருகியதாய், நறுமணத்தில் வாழ்கின்ற வண்டுகள் மொய்த்து மகிழ்வதாகி, இரவுக்கு பயத்தை அளிப்பதாய், சிக்கல் இல்லாததாய், சமானம் இன்றி அலங்காரத்தில் உயர்வு அடைந்து, வளைவும் சுருளும் உடையதாய், விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், அஞ்சனத்துக்கு ஒப்பு என்னும்படியாகி, அகில் தருகின்ற புகையின் தொகுதி மிகுந்து விளங்கும் புனுகு கமழ்கின்ற கூந்தலின் மேலும், வஜ்ரம் போல ஒளி தரும் பச்சைப் பொட்டை (நெற்றியில்) இட்டு, அந்தப் பொட்டுக்குள் சிவந்த பிரபை போல வளைந்த செழிப்புள்ள பிறைக்கு ஒப்பாக உறைவதாகி, மன்மதனின் வில் என்னும்படி இந்திரன் ஏவிய வான வில் என்னும்படி (வளைவாய் விளங்க வைத்த) பிறை போன்ற குறி அமைந்துள்ள நெற்றியின் மேலும், (உடலில் உள்ள) மச்சங்களின் மீதும், சிவந்த விசித்திரமான அதிசயிக்கத் தக்க அழகிய உடல் பக்கங்களிலும் இச்சை கொண்டவனாய் மனத்தில் நினைத்தவை எல்லாவற்றையும் அறிந்து உதவவல்ல உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக. விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம் தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த பீமனுக்குக்) காட்டியும்* விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும் பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால், சிரித்த முகத்தை உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும் சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும் மாயவனாகிய திருமால், நரிக்கும், வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப் பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே, கச்சைக் கட்டி அழகாக முடி போட்டு பட்டுத் துணிக்குள் அமைந்ததாய் உள்ள, அமுதக் குடம் பொதிந்து அசைவதாய், கரும்பின் ரசத்தையே உருச் செய்து வைத்திட்டதாய் உள்ள (வள்ளியின்) பருத்த மார்பகங்களின் நறு மணத்தில் முழுகும் பன்னிரு தோள்களை உடையவனே, பொன்னாலாய மேன்மையான ரத்தினங்களை அணிந்த மார்பனே, கையில் விளங்கும் வேல் ஆரவாரம் செய்து நன்றாக உண்ணும்படி, வாத்திய முழக்குடன் வந்த அசுரர் தலைவனாகிய சூரனை கரு நிறம் உடைய அரக்கர்கள் கூட்டத்துடன் கோபித்து அழித்த இளையவனே, வழிகளின் பக்கங்களில் உள்ள காடுகள் சூழும் திருவேங்கட மலையில் உறையும் பெருமாளே.
* ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன்.அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 526 - திருவேங்கடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், தனதன, உள்ள, அந்த, தனத்த, விஷம், என்னும், மீது, உடைய, செய்து, பீமனைக், கையில், உறையும், அழகிய, திருமால், என்னும்படி, பிறைக்கு, பச்சைப், பரிமள, தனதான, பெருமாளே, உடையதாய், வில், சிவந்த, மேலும், விளங்கும், தக்க