பாடல் 523 - ஸ்ரீ சைலம் திருமலை - திருப்புகழ்

ராகம் -
பிலஹரி ; தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத ...... முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியொடு வொளிபெற ...... விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது ...... புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே பரிவுட னழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை ...... பணியாரம் பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி ...... யிளையோனே பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள்தரு ...... குமரேசா பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திருமலை ...... பெருமாளே. |
ஒரு பத்து, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு தத்துவங்களின்* உண்மையை உணர்ந்து, உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் தியானித்து அதனால் உள்ளம் உருகிட, பூரண சந்திரனது தீப்போன்று ஒளி வீசும் பரவெளியின் ஒளியை யான் பெற்று அதோடு கலவாமல், வீதியிலே மரம் போல நின்று யாரோடும் பேசித் திரியும் தொழிலை யான் மேற்கொண்டு வீணாக அலையாது இருப்பதற்காக, லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய திரண்ட தோள்களை உடையவனே, ஆறுமுகனே, உன் அருட்காட்சி பெற எனக்கு அருள் புரிவாயாக. அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன், கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை உண்ணும் பெரு வயிற்றை உடையவரும், பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான கணபதிக்குத் தம்பியே, பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும், உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும், அடியார்களின் பிறவிநோய் தொலையவும் திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே, பெண்யானைகளோடு ஆண்யானைகள் உலாவும், கலைமான்களின் கூட்டம் பெண்மான்களோடு விரும்பி அமரும் திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள பெருமாளே.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
** ஸ்ரீசைலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இங்குள்ள மல்லிகார்ச்சுனரும் ஒருவர்.தமிழில் இவ்வூர் திருமலை, திருப்பருப்பதம் எனப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 523 - ஸ்ரீ சைலம் திருமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தத்துவம், புறநிலை, தத்துவங்கள், யான், உள்ளம், உருகிட, திருமலை, பெருமாளே