பாடல் 522 - கயிலைமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த ...... தனதான |
முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால் நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து நயத்துத் தியக்கி நித்த ...... மழிவேனோ செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும் செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன் மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே. |
முகத்தை நன்றாக ஒழுங்கு செய்து மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்தின மயமான மார்க் கச்சை அவிழ்த்து சற்றேனும் பின் வாங்காமல் அசைத்து, முழுமையாகக் காலம் போக்கியும், வஞ்சித்தும், தாமதப் படுத்தியும், (வந்தவர்களிடம்) பொருளைப் பறித்தும், தங்களுடைய பேச்சில் மயங்கி உட்படச் செய்தும், அவர்களைஅழைத்துக் கொண்டு போய் படுக்கையின் மேல், சிரித்து அணைத்து முத்தம் கொடுத்து, மகிழ்ந்து, மிகுந்த பக்குவத்துடன் கழுத்தை அழுந்த அணைந்து கொள்ளும் விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், மிகவும் மனதை அவர்கள் பால் (ஓடை போலப்) பெருகிப் பாய வைத்தும், (அவர்களை) நயந்து வேண்டியும், கலக்கம் உற்று தினந்தோறும் அழிந்து போவேனோ? செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற தாள ஒத்துக்களுடன் கூத்தாடுகின்ற, உலகுக்கு ஒப்பற்றவராய் நிற்கும் சிவபெருமானுடைய குமரனே, (உன்னைத்) தியானித்து வணங்கும் அடியார் கூட்டத்துக்கு இனிமையான பேற்றை அருள்பவனே, மேல்சென்று திடத்துடன் பொருந்தி (மலையின் பாரத்தைப்) பொறுத்து, ராவணன் ஆணவம் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய மலையில் வீற்றிருந்து, அந்தக் கயிலை மலைக்கு அடுத்திருந்த பிறிதொரு மலையான கிரவுஞ்சத்தைப் பொடியாகும்படி தூள் செய்து அடக்கித் தொகைத்து விட்ட பெருமாளே.
* ராவணன் திக்கு விசயம் செய்த போது அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாமல் நிற்க, அந்த மலையை வேரோடு பறித்து எறிய முயன்றான். மலை அசைந்தவுடன், சிவபெருமான் தமது கால் விரலால் அம்மலையை அழுத்தினார். இராவணன் நசுக்குண்டு இன்னிசை பாடி இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 522 - கயிலைமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத், தத்த, மெத்த, தனத்த, விட்ட, கயிலாய, தித்தி, பெருமாளே, மிகவும், கயிலை, ராவணன், திமித்தி, செய்து, தரிக்க, செகக்கச், தொடைத்து, மினுக்கித், செகக்க, செக்க, தக்க, தரிக்கத், திமித்தித்