பாடல் 52 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா |
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங் குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன் குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன் குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங் குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல் விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும் வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும் மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ...... செஞ்செநீடும் வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென் றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன் விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் ...... தன்புறாதோ படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந் துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம் பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ...... சிந்தும்வேலா படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன் பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும் பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் ...... கங்கைமான்வாழ் சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந் தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண் சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ...... பொங்கிநீடும் சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின் றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந் தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே. |
கொடி போன்ற இடை துவள, அங்கம் கிளர்ச்சி கொள்ள, அழகிய குமுத மலர் போன்ற அமுதளிக்கும் வாயிதழைப் பருகி இன்பம் கொள்ளும் எண்ணத்தை உடையவன் நான். விலைமாதரோடு குலவி அணைந்து, மேகம் போன்ற கரிய கூந்தலும் சரிந்து, அவர்கள் மீது அன்பினால் வரும் ஆசை வர, வளைந்த விரல் நகக் குறியால் புண்படுகின்ற ஏக்கம் கொண்டவன் நான். கொஞ்சிப் பேசி அந்த மாதர்களுடன் இனிய களிப்பு கொண்டு உள்ளமும் குரலும் ஒடுங்க தன்வசம் இழக்கும் குறுகிய குணத்தை உடையவன் நான். மணம் விரிந்து பொருந்தும் பாய் மீது நஞ்சு போன்ற கண்களை உடைய மகளிர் மார்பகங்களின் இன்பத்தில் அன்பு கொள்ளும் செயலை உடையவன் நான். தகுதியுடன் பொருந்திய உயிர் வெந்து அழிந்து உடலும் இன்பத்தை இழக்க, அறிவில்லாத வழிப் போக்கில் நெருங்கும் தோழன் நான். செவ்விதாய் நீடித்துள்ள மிக்க பொன் ஒளி விளங்கும் அழகு பொருந்திய திருச்செந்தூர் என்று கருதி நெகிழ, மனம் உருகி வருகின்ற அன்பு இல்லாதவன் நான். நூல் ஆராய்ச்சி இல்லாதவன் நான். (இருப்பினும்) அத்தகைய எனக்கு உனது பொருந்திய இரண்டு தாமரை போன்ற திருவடியைத் தந்து மகிழ்ந்து அன்பு காட்ட மாட்டாயோ? படம் விளங்கும் பாம்பின் உடலையும் அங்கங்களையும் பிளவுபடக் கிழித்து உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளி வந்து, தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் எல்லாருடைய உடல்களும் பிளவுண்டு பிளவுண்டு போகும்படி, அவ்விடத்தில் கொன்ற வேலனே, மண்ணவரும் தேவர்களும் நின்று வணங்கும் எட்டு குணங்களை உடையவன். பழம் பொருளாகிய இறைவன். உருவம் இல்லாதவன். அடியார்கள் பங்கில் இருப்பவன். பெரிதும் துன்பம் செய்து வந்த திரி புரங்களும் எரியும்படித் திறந்த சிவந்த (நெற்றிக்) கண்ணை உடையவன். மான் போன்ற கங்கை(நதி)யாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது அழகாகத் தரித்த கொன்றை மலரும், குணம் கொண்ட இள மதியின் குறைத் துண்டத்தையும், சிவந்த கையில் எல்லா உலகங்களும் ஒழிக்க வல்ல பெருங் கோபம் கொண்டுள்ள ஒள்ளிய நெருப்பையும், கிளர்ந்து உயர்ந்த உடல் கொண்ட (நந்தியாகிய) ரிஷபத்தையும் பாம்பையும் கொண்டவன், (அந்த சிவபெருமானின்) தூய, அழகிய (இடப்) பக்கத்தில் நின்று உலகெலாம் அளிக்கும் கெளரி உமை முலைப் பாலைத் தந்து அன்பு கொள்ளும் தமிழ் வல்லவனே, உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே.
* சிவனின் (இறைவனின்) எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 52 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நான், தனதனன, உடையவன், அன்பு, மீது, தந்தனந், பொருந்திய, இல்லாதவன், உடைமை, தந்தனம், கொள்ளும், வணங்கும், ஆதல், நின்று, உயர்ந்த, கொண்ட, பொருளாகிய, சிவந்த, பிளவுண்டு, அந்த, தம்பிரானே, சங்கரன், அங்கமும், அழகிய, இன்பம், விளங்கும், கொண்டவன், தந்து