பாடல் 519 - கயிலைமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த ...... தனதான |
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி ...... லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து ...... மொழியாலுந் திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை திரட்டி யெடுத்து ...... வரவேசெய் திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப் பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த ...... தனமாதை மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே. |
சிரித்து, (மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, பல விதமாக அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து, பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில், அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு வரும்படி செய்கின்ற திருட்டுப் பெண்களின் மார்பகங்களான மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும் விழுவேனோ? பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி, செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம் கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட பெண்ணாகிய வள்ளியை, சிறப்பு மிக்க தினைப் புனத்தில் (வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய கயிலைகிரியில் உறைகின்ற நாதனே, விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண் இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 519 - கயிலைமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, கொண்ட, அணைத்து, கையில், பெருமாளே, விழுவேனோ, விழித்து, நடித்து, முகத்தை